மக்களே வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்… பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தென்காசி ஆட்சியர் உத்தரவு!!!
Author: Udayachandran RadhaKrishnan17 December 2023, 4:57 pm
மக்களே வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்… பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தென்காசி ஆட்சியர் உத்தரவு!!!
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை கொட்டி வருகிறது. இதனால், தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், சிவகிரி, தென்காசி, ஆய்குடி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. குற்றாலத்தில் அதிக நீர் பெருக்கெடுத்து வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில், தென்காசி மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அம்மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்காசி மாவட்ட மக்கள் கவனத்திற்கு, பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளுக்கு சென்று குளிக்க வேண்டாம்; நீர்நிலைகளுக்கு ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கினால் மாவட்டத்திலுள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் தங்கிக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.