தினமும் கோவை மக்கள் அச்சத்திலேயே வாழ்கின்றனர்.. நேற்று கூட ஒருவர் பலி : முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2024, 5:06 pm

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூர் பகுதியில் நேற்று காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருவர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் அதே காட்டு யானை இன்று காலை பொதுமக்கள் சிலரையும் தாக்கியுள்ளது.இரு தினங்களில் யானை தாக்கி 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.இந்நிலையில் அந்த பகுதி பொதுமக்களுடன் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு கொடுக்க வந்த பொதுமக்களை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க மறுக்கின்றனர்.

பிரச்சினையை சொல்ல வந்த மக்களை தடுப்பது என்பதை ஏற்க முடியாது.தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி யானைகள் வருகின்றது.

இதனால் பொதுமக்களுக்கு அடிக்கடி பாதிப்பு ஏற்படுகின்றது.விராலியூர் பகுதியில் காட்டுயானை தாக்கியதில் நேற்று உயிரிழந்துள்ளார்.இன்று காலையிலும் பொதுமக்களை யானை தாக்கி இருக்கின்றது வனத்துறை யானைகளை விரட்டுவதில் முறையாக செயல்படுவதில்லை. பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய நிதி உதவியும் வழங்குவதில்லை. தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு டார்ச் லைட் கொடுக்க வேண்டும்.வனப்பகுதி அருகில் அகழி,மின்வேலி போன்றவை அமைக்க வேண்டும்.அதை முறையாக தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அதிகமாக கொடுக்க வேண்டும். நேற்று ஒருவர் இறந்த நிலையில் வனத்துறை அங்கேயே இருந்திருந்தால் இன்று காலை மக்கள் காயம் அடைந்து இருக்க மாட்டார்கள்.அந்த பகுதியில் பொதுமக்களை தொடர்ந்து தாக்கி வரும் சம்மந்தபட்ட யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும்.

பொது மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். காட்டுயானைகளை விரட்டுவதில் கோவை வனத்துறை உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதில்லை. யானைகளை விரட்ட உரிய நடவடிக்கைகள் எடுப்பதை வனத்துறை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!