பேரறிவாளன் விடுதலை விவகாரம் : திமுக- காங். மோதல் உச்சகட்டம்… திமுக மேலிடத்தின் மாஸ்டர் பிளானா?!!
Author: Udayachandran RadhaKrishnan13 May 2022, 6:27 pm
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
பேரறிவாளன் விடுதலை?
இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதன் அடிப்படையில் பார்த்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்படலாம் என்ற எண்ணமே அனைவரிடமும் மேலோங்கும். இதனால் மகிழ்ச்சி அடைந்தவர்களில் ஒருவர், தர்மபுரி நாடாளுமன்ற திமுக எம்பி செந்தில்குமார் என்று சொல்லலாம்.
திமுக எம்பி போட்ட வாழ்த்துப் பதிவு
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கையில் கிளியுடன் இருக்கும் பேரறிவாளனின் புகைப்படத்தை வெளியிட்டு அட்வான்ஸ் வாழ்த்துகள் என குறிப்பிட்டிருந்தார்.
இதன் உள்ளர்த்தம் இதுநாள் வரை கூண்டுக் கிளியாக இருக்கும் நீங்கள், விரைவில் சுதந்திர பறவையாக வெளியே வருவீர்கள். நிச்சயம் விடுதலை ஆகி விடுவீர்கள், அதற்காக முன்கூட்டியே வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
ஆனால் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் நகரில் மனித வெடிகுண்டால் 1991தேர்தல் பிரச்சார மேடையில் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட துயர நிகழ்வு காங்கிரசாரின் மனதைவிட்டு அகலாமல் இன்னும் அப்படியே உள்ளது என்பதை உணர முடிகிறது.
காங்கிரஸ் எம்பி கொந்தளிப்பு
இவர்களில் செந்தில்குமாரின் ட்விட்டர் பதிவால், முதலில் மிகுந்த கொந்தளிப்புக்கு உள்ளானவர், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்பி, கார்த்தி சிதம்பரம்தான்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு 7 பேர் விடுதலை தொடர்பாக, தான் அளித்த பேட்டியின் வீடியோவை சமூகவலைதள பக்கத்தில் அவர் உடனடியாக பகிர்ந்தார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்திலும் செந்தில்குமார் எம்பிக்கு பதிலடியும் கொடுத்திருந்தார்.
அவற்றில் கார்த்தி சிதம்பரம் கூறும்போது “ராஜீவ் காந்தி என்று இறந்தார்? அவருடன் எத்தனை பேர் இறந்தனர்? அவர்களுடைய பெயர்கள் யாருக்கும் தெரியாது. ஆனால் அவர்களை கொலை செய்தவர்களின் பெயர் மட்டும் எல்லோருக்கும் தெரிகிறது.
ராஜீவ்வுடன் இறந்தவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டாமா?
தமிழ், தமிழர் என கூறிக் கொள்ளும் கட்சிகள் 7 பேரை பற்றி மட்டுமே பேசுகிறார்களே, என்றைக்காவது ராஜீவ் காந்தியுடன் இறந்தவர்களின் பெயர்களை சொல்லியுள்ளார்களா? அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டாமா, ஒரு ஆயுள் தண்டனை கைதி இத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டத்தில் இடம் இருந்தால் அதை சட்டப்படி செய்யட்டும். நான் வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் அதற்காக அவர்களை ஹீரோக்களாக ஆக்காதீர்கள்” என ஆவேசமாக கொந்தளித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் அதிருப்தி
அதேபோல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அமெரிக்கை நாராயணன், தனது ட்விட்டர் பதிவில், “ஜெயலலிதா அரசு கொலைகாரர்களை விடுவிக்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய போது, தமிழகத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் அமைதி காத்த போது அதை எதிர்த்து அடுத்தநாளே பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய ஒரே நபர் நான்”என்று கோபம் கொப்பளிக்க கருத்து தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவரை கேலி செய்த திமுக எம்பி
அதற்கு செந்தில்குமார் எம்பி, அமெரிக்கை நாராயணனை கேலி செய்யும் விதமாக
“அமெரிக்கா Sir., நீங்க தட்ட வேண்டியது சுப்ரீம் கோர்ட் கதவை. அங்க போய் உங்க வாத திறமையை காட்டுங்க. Wishing you the very best” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனால் ஆவேசமடைந்த அமெரிக்கை நாராயணன் அதற்கு பதிலடியாக, “என் பெயர் அமெரிக்கா இல்லை. “அமெரிக்கை” என்றால் பணிவு என்று தமிழர்களுக்கு தெரியும். நான் பலரைப் போல ஏசி ரூம் அரசியல்வாதி அல்ல. உச்ச நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட அவர்களுக்காக வாதாடி தோல்வி அடைந்தவன்.
உங்களைப்போல் கொலைகாரர்களுக்கு தமிழர் என்று பரிந்து பேசவில்லை.14 தமிழர்களைக் கொன்று தூக்கு தண்டனை பெற்ற கொலைகாரனை வரவேற்கும் தமிழக மக்களின் பிரதிநிதி, தமிழர்களின் தலைவிதி” என்று கொதித்தெழுந்தார்.
இப்படி காங்கிரஸ் தலைவர்கள் திமுக எம்பியிடம் பேரறிவாளன் விடுதலை விவகாரம் தொடர்பாக, கொந்தளித்து இருப்பது, தமிழகத்தில் காங்கிரஸ்- திமுக இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டி இருப்பதை காட்டுகிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
எஞ்சிய 6 பேரும் விடுதலை?
“7 பேர் விடுதலை தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் எடுக்கும் முடிவை மட்டுமே தமிழக காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும் என்று கே எஸ் அழகிரி தொடர்ந்து கூறிவரும் நிலையில், தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாகவே திமுக எம்பி செந்தில்குமார், பேரறிவாளனுக்கு பாராட்டு தெரிவித்திருப்பது காங்கிரஸ் தலைவர்களை மிகுந்த எரிச்சலடைய வைத்துள்ளது.பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டால் ராஜீவ் கொலையாளிகள் மேலும் 6 பேரை விடுதலை செய்யவேண்டும் என்கிற கோரிக்கை தமிழகத்தில் வலுப் பெறலாம் என்றும் காங்கிரஸ் கருதுகிறது.
அதுமட்டுமின்றி ராஜீவ் காந்தியுடன் உயிரிழந்த போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அவர்களின் குடும்பத்தினர் படும் வேதனையையும் காங்கிரஸ் தலைவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
எம்பி சீட்டுக்கு போட்டா போட்டி
ஏற்கனவே,தேசிய அரசியலில் திமுக தீவிர ஆர்வம் காட்டி வருவதால் அதிர்ச்சியில் உள்ள காங்கிரஸ், தற்போது அக்கட்சியை சேர்ந்த எம்பி ஒருவர் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்திருப்பது காங்கிரஸ்- திமுக இடையேயான கருத்து வேறுபாடு தீவிரமடைந்து இருப்பதை வெளிப்படுத்துகிறது. ஏனென்றால் முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தயவால்தான் எம்பி தேர்தலில் செந்தில்குமார் நின்று பெற்றார் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவது உண்டு.
எனவே 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசுக்கு மிகக் குறைந்த அளவே தொகுதிகளை திமுக ஒதுக்கலாம் அல்லது தனது கூட்டணியில் இருந்து காங்கிரசை கழற்றி விட்டு பாமகவை சேர்க்கலாம் என்ற எண்ணத்தில் இதுபோன்ற மோதலை செந்தில்குமார் ஏற்படுத்துகிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள், நினைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது” என்று அந்த அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.