அண்ணாமலையுடன் யாத்திரையில் செல்பவர்கள் பாஜகவினரே அல்ல : திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan8 November 2023, 5:56 pm
அண்ணாமலையுடன் யாத்திரையில் செல்பவர்கள் பாஜகவினரே அல்ல : திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!!
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தொல்.திருமாவளவன் எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலை அகற்றுவோம்; இந்து சமய அறநிலையத்துறையை மூடுவோம் என அண்ணாமலை பேசுகிறார். அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என அழைப்போம் என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் பாஜக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரப்போவது இல்லை. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமாட்டோம் என்பது அண்ணாமலைக்கே நன்றாக தெரியும். விசிக, திமுக கூட்டணியில் இருக்கிறது. ‘இந்தியா’ கூட்டணியில் தொடருவோம். எங்கள் கூட்டணியை நாங்கள் வலுப்படுத்துவோம்.
அதிமுக தன்னுடைய இடத்தை தக்க வைத்து கொள்வது அவசியமானது. கூட்டணிக் கட்சியாக இருந்து கொண்டே அதிமுகவை பலவீனப்படுத்துவதுதான் பாஜகவின் வேலை. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியே பாஜகதான்; அதிமுக இல்லை என சொன்னது. இதனை காட்டிக் கொள்ளவே அத்தனை வேலைகளையும் செய்தது பாஜக.
தமிழ்நாட்டில் உறுப்பினர்களே இல்லாத ஒரு கட்சி, ஒரு நாளைக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து நடைபயணத்தை மேற்கொள்கிறார்கள் எனில் பணம் எங்கிருந்து வருகிறது? யார் தருகிறார்கள்? பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தக் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் யார்? நடந்து வருகிறவர்கள் யார்? என்பதை பார்க்க வேண்டும்.
அண்ணாமலையின் நடைபயணத்தில் தொண்டர்களாக பங்கேற்க கூடியவர்கள் அதிமுக, பாமகவினர்தான். அண்ணாமலையுடன் நடப்பது பாஜக தொண்டர்கள் இல்லை. அண்ணாமலையுடன் நடந்து போகிறவர்கள் அதிமுக தொண்டர்கள்; பாமக தொண்டர்கள்.
இதன் மூலம் அதிமுக, பாமகவில் உள்ளவர்களை மெல்ல மெல்ல பாஜகவின் கருத்தியலுக்கும் அரசியலுக்கும் ஏற்ப மாற்றி வருகிறார்கள். அதாவது பலவீனப்படுத்தி வருகிறார்கள். இது அதிமுகவுக்குதான் பெரும் சேதத்தை விளைவிக்கும்.
திமுகவை எதிர்க்கும் வலிமை அதிமுகவுக்கு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். அதிமுக ஒரு எதிர்க்கட்சி. பாஜகவின் 4 பேருமே அதிமுகவின் தயவில் வென்றவர்கள்தான். ஏனெனில் 90% அதிமுகவின் வாக்குகளைப் பெற்றுதான் ஜெயித்தார்கள். பாஜகவுக்கு கிளைகளும் இல்லை. தொண்டர்களும் இல்லை. இவ்வாறு தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
0
0