அட்டன்ட் பண்ணுனாலே முழு மதிப்பெண்ணா..? 10 மற்றும் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி விவகாரம்… தமிழக அரசுக்கு பாஜக வார்னிங்..!!
Author: Babu Lakshmanan3 June 2022, 1:26 pm
தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மாவட்டந்தோறும் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த மையங்களில் நேற்று முன்தினம் முதல் விடைத்தாள் திருத்தும் பணிகளை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 13ம் தேதி வரை நடக்கிறது. இதைத் தொடர்ந்து, இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
இதனிடையே, 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது என்றும் தமிழக அரசு தரப்பில் வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பிரபல செய்தி நிறுவனங்களில் கூட செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. அதில், 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது என்றும், மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், தோல்வி அடையும் மாணவர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “இது உண்மையாக இருந்தால், தவறான அறிவுறுத்தல். தமிழக மாணவர்கள் அறிவாளிகள். அவர்களை சிறுமைப்படுத்தும் செயலே இது. நிர்வாக சீர்கேடு. தரமான கல்வியை கொடுக்க முடியாததை மறைக்கும் அரசின் தரமற்ற செயல்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பாஜகவினர் கூறியதாவது :- ஏற்கனவே, கொரோனா தொற்று பாதிப்பினால் 2 ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாததால், அவர்களிடையே படிக்கும் திறன் குறைந்து விட்டதாக பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால், மாணவர்கள் திறன் குறைந்து காணப்படுகிறார்கள்.
எனவே, மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் விதமாக, பள்ளிகளில் கல்வி சார்ந்த நிகழ்வுகளை நடத்தப்பட வேண்டும். அதைவிட்டு விட்டு, பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதில் கருணை காட்டக் கூடாது. இப்படி செய்வதன் மூலம் மாணவர்களிடையே வேண்டுமானால் திமுக பெற்று விடலாம். ஆனால், தரமான மாணவர்களை உருவாக்க முடியாது.
நல்ல நிறுவனம் கிடைக்கவில்லை என்று மாணவர்களும், தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என்று நிறுவனங்களும் இல்லாத நிலையை மாற்ற வேண்டும் என்று கூறி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், இதுபோன்ற நடவடிக்கைகளால், எப்படி அதனை சாத்தியப்படுத்துவார். நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை திமுக அரசு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், பன்னிரெண்டாம் மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஆசிரியர்களை தாராளம் காட்ட சொல்லிவிட்டு, தரமான மாணவர்கள் கிடைப்பார்கள் என்று எதிர்பார்ப்பது என்ன பயன்..?. ஒருவேளை தமிழக அரசு தரப்பில் இருந்து ஆசிரியர்களுக்கு இதுபோன்ற உத்தரவு விடுக்கப்பட்டிருந்தால், அதனை அரசு திரும்பப் பெற வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர்.