பொதுத்தேர்வுக்கு பயந்து மாணவர் தூக்கிட்டு தற்கொலை.. விபரீத முடிவுகள் வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வேண்டுகோள்..!!
Author: Babu Lakshmanan5 May 2022, 8:36 pm
வேலூர் மாவட்டம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பயந்து மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. தேர்வுக்கு மாணவ மாணவிகள் ஆயத்தமாகி உள்ளனர். முதல் நாளான இன்று மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வு எழுத சென்றனர். இந்த நிலையில், தேர்வுக்கு பயந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அரியூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் கோபி என்பவரது மகன் மோனிஷ் (16). தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், தாய் பரிமளா ஷு கம்பெனியில் வேலைக்குச் சென்று மோனிசை படிக்க வைத்தார்.
நேற்று மாலை பரிமளா ஷு கம்பெனியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது, மோனிஷ் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இன்று தேர்வு தொடங்குவதால் மாணவன் மோனிஷை படிக்குமாறு பரிமளா அறிவுரை வழங்கினார். இதனையடுத்து, மோனிஷ் வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்.
மகன் தேர்வுக்கு படிக்கிறான் என நினைத்து பரிமாளாவும் அந்த அறைக்கு செல்ல வில்லை. ஆனால், அறையில் இருந்த மோனிஷ் தேர்வுக்கு பயந்த நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. இதனால், மனமுடைந்த மோனிஷ் அந்த அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மோனிஷ் அறைக் கதவை திறந்து பரிமளா உள்ளே சென்றார்.
அங்கு மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று பிளஸ்2 தேர்வு தொடங்கிய நிலையில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் எந்தவித அச்சம், பதட்டம் அடைய வேண்டாம். இதுபோன்ற விபரீத முடிவுகளில் ஈடுபட வேண்டாம் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
0
0