பிரதமர் பதவி குறித்து பிறகு யோசிக்கலாம்… முதல்ல இதை பண்ணுங்க ; திமுகவை மீண்டும் சீண்டும் திருமாவளவன்

Author: Babu Lakshmanan
2 March 2023, 10:28 am

முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்று பரூக் அப்துல்லா கருத்து தெரிவித்த நிலையில், அதைப் பற்றி தற்போது பேச வேண்டிய அவசியமில்லை என்று திருமாவளவன் கூறியது கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, 2019லும் வெற்றியடைந்து 2வது முறையாக ஆட்சியமைத்து வருகிறது. அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து, ஆட்சியை தொடர பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான பணிகளை அனைத்து மாநிலங்களிலும் துரிதப்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் பாஜகவிற்கு எதிரான அணியை ஒன்றிணைக்க எதிர்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்காக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சி தலைவர்களை பல முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியும் உள்ளனர். ஆனால், யார் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது, பிரதமர் வேட்பாளர் யார்.. உள்ளிட்ட சில கேள்வியின் காரணமாக, அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் எதிர்கட்சிகள் பிரிந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி சென்னையில் நேற்று மாலை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பரூக்அப்துல்லா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக அணைவரும் ஒன்றினைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதுமட்டுமில்லாமல், முன்னதாக சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பரூக் அப்துல்லா, ‘‘இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியின் தொடக்கமாக இந்த நிகழ்ச்சி உள்ளது. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து தேர்தலை சந்திப்போம்’’ என்றார். தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர் ஆவாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘‘மு.க.ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடாது?’’ என தெரிவித்தார்.

இந்த நிலையில், பிரதமர் வேட்பாளர் பற்றி தற்போது பேச வேண்டிய அவசியமில்லை என்று திருமாவளவன் கூறியது திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சனாதன சக்திகளை எதிர்த்துப் போராடும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள அனைத்து பாஜக எதிர்ப்புத் தலைவர்களையும் சந்திக்க வேண்டிய நேரம் இது என தெரிவித்துள்ளார். தேசத்திற்கு ஆபத்தான சூழ்நிலைகள் உருவாகும் இந்த நேரத்தில் பிரதமர் பதவி குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமில்லை, என தெரிவித்துள்ளார்.

எனவே, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவதற்கு ஒத்த எண்ணம் கொண்ட தலைவர்களை ஒன்றினைக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன் வர வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சந்திர சேகர் ராவ், அரவிந்த் கெஜ்ரிவால், உத்தவ் தாக்ரே, பிரணாயி விஜயன், ஜெகன் மோகன் ஆகியோரை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாக திமுகவின் செயல்பாடுகளை வெளிப்படையாக திருமாவளவன் விமர்சித்து வரும் நிலையில், தற்போது இந்த கருத்தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 421

    0

    0