எத்தனை தடைகள் வந்தாலும் தமிழக வளர்ச்சிப் பணிகளை செய்தே தீருவேன்… தமிழக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்த பிரதமர் மோடி…!!!

Author: Babu Lakshmanan
28 February 2024, 11:44 am

தமிழகத்தில் வளர்ச்சி குறித்து நான் பேசினாலும் செய்தித் தாள்களில் அதனை வெளியிட திமுக அரசு விடாது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் 2 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
துறைமுக விரிவாக்கம் உள்ளிட்ட ரூ.17,400 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். துறைமுகத்தை கப்பல் போக்குவரத்து மையமாக மாற்றும் நடவடிக்கையாக சரக்குப் பெட்டக முனையம் அமைகிறது. நாட்டின் முதல் பசுமை துறைமுகமாக மாறும் தூத்துக்குடி துறைமுக திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கக் கூடிய கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். அதேபோல,
தமிழகத்தின் முதல் ராக்கெட் ஏவுதளமான குலசேகரன்பட்டினத்தில் 2,233 ஏக்கர் பரப்பளவில் அமையும் நாட்டின் 2வது ராக்கெட் ஏவுதள வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, மேடையில் பேசிய பிரதமர் மோடி :- வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு இந்த திட்டங்கள் உந்துதலாக இருக்கும். வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் எழுதப்பட்டுள்ளது. ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உணர்வை தூத்துக்குடியில் நம்மால் காண முடிகிறது. திட்டங்களின் தொடக்கம் என்பது அனைவரின் முன்னேற்றம், வளர்ச்சி, நம்பிக்கையின் எடுத்துக்காட்டு.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை மிகப்பெரிய சரக்கு முனையமாக மாற்றுவேன் என்று உறுதி அளித்தேன் ; தற்போது அதனை நிறைவேற்றியிருக்கிறேன். கடல் வாணிபத்திற்கு அளிக்கப்பட்டுள்ள புத்துயிர் காரணமாக இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். உண்மை கசப்பாக இருக்கலாம் ; அதன் உண்மைத் தன்மை சத்தியமாக இருக்கும்.

காங்கிரஸ் ஆட்சியில் பல தசாப்தங்களாக காகித வடிவில் தான் நலத்திட்ட உதவிகள் இருந்தன ; UPA அரசு தமிழ்நாட்டின் மீது எந்த அக்கறையும் காட்டவில்லை ; பல ஆண்டுகளாக திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது எங்கள் ஆட்சியில் தான் மக்கள் நலத்திட்டங்கள் உண்மையாக மக்கள் நலத்திட்டங்களாக நிறைவேற்றப்படுகின்றன. தமிழகத்திற்கும், காசிக்கும் இடையே நான் பார்த்த நல்லுறவு காசி தமிழ்ச்சங்கம் மூலமாக ஆழமாக மாறியிருக்கிறது.

புதிய சாலை வழித்திட்டங்கள், சாலை மேம்பாட்டு திட்டங்கள், தொழிற்துறைக்கும், சுற்றுலாத் துறைக்கும் உந்துதலாக இருக்கும்.
ரூ.4,500 கோடி மதிப்பில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சாலை திட்டங்களால் பயண நேரம் குறையும். இரட்டை ரயில் வழிப்பாதைகள், மின்மயமாக்கப்பட்ட பாதைகள், தமிழ்நாடு – கேரளா இடையேயான இணைப்பை மேலும் சிறப்பானதாக மாற்றும். மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டில் உள்ள 75 கலங்கரை விளக்கங்கள் சிறந்த சுற்றுலா தலங்களாக மாற்றப்படும் என உறுதியளித்தேன்.

நான் இங்கே உரையாற்றுவது ஒரு அரசியல் கட்சியின் சித்தாந்தமோ, தனிப்பட்ட கோட்பாடோ கிடையாது ; இது அனைத்தும் வளர்ச்சியின் கோட்பாடு. மத்திய அரசு கொண்டு வரும் நலத்திட்டங்கள் தமிழகத்தில் மறைக்கப்படுகின்றன. நான் கூறும் வளர்ச்சிக்கான கோட்பாட்டை பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் வெளியிடுவதில்லை. தமிழகத்தில் வளர்ச்சி குறித்து நான் பேசினாலும் செய்தித் தாள்களில் அதனை வெளியிட இங்குள்ள அரசு விடாது. ஆனாலும் கூட இந்த தடைகளை எல்லாம் தாண்டி தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வேன். எத்தனை தடைகள் வந்தாலும், அந்த தடைகளை தாண்டி தமிழ்நாட்டிற்கான வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு செய்தே தீரும்.

நவீன இணைப்புத்திறனில் தமிழ்நாடு புதிய உயரத்தை எட்டியுள்ளது ; 1,3000 கி.மீ. நீளம் ரயில் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. நீர்வழிப்பயண திட்டங்கள் மூலம் தமிழகம் வேகமாக முன்னேறும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
எனது தமிழக சுற்றுப்பயணத்தில் தமிழர்கள் என் மீது அன்பை தொடர்ந்து மழைபோல் பொழிந்து வருகின்றனர் ; இந்த அன்பை பலமடங்கு திருப்பி தருவேன் என்று உத்தரவாதம் தருகிறேன், எனக் கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 257

    0

    0