‘என் தமிழ் குடும்பமே’.. தமிழ் மொழியை புகழாமல் என்னால் இருக்க முடியாது… தேசத்தின் வளம், கலாச்சாரமே தமிழ்நாடு தான் ; பிரதமர் மோடி…!!
Author: Babu Lakshmanan2 January 2024, 1:35 pm
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த தேசமாக நாம் மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 2வது புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர், விமான நிலையத்தை பார்வையிட்ட அவர், தேசிய நெடுஞ்சாலைத்துறை, துறைமுகம் உள்பட பல துறைகளுக்கான ரூ.20,140 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, அவர் பேசியதாவது:- எனது தமிழ் குடும்பமே, அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று தமிழில் கூறிய பிரதமர் மோடி உரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது :- 2024ம் ஆண்டின் எனது முதல் பொது நிகழ்ச்சி தமிழகத்தில் நடப்பது எனது பாக்கியம். கடந்த 2023ம் ஆண்டின் கடைசி சில வாரங்கள் தமிழகத்திற்கு சோதனை காலமாக இருந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தார் ; அவரது மறைவு அரசியலுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் பேரிழப்பு. அனைத்தையும் விட தேசத்தை அதிகமாக நேசித்தவர் கேப்டன் விஜயகாந்த். பசுமை புரட்சியின் தந்தை எம்எஸ்எஸ் சுவாமிநாதனின் மறைவுக்கு இரங்கல்.
நான் தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் புதிய சக்தியை பெற்றுச் செல்கிறேன். உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தமிழ்நாட்டை பற்றி பேசாமல் இருந்ததில்லை. நம் பாரதத்தின் வளம் மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு தான் தமிழ்நாடு. தமிழ் மொழியை மனதாரப் புகழாமல் என்னால் இருக்க முடியாது ; திருச்சி நகரம் என்று சொன்னாலே வளமான வரலாற்று சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன ; பிரதமர் மோடி
உலகின் தலைசிறந்த 5 பொருளாதார நாடுகளில் இந்தியா இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு உள்கட்டமைப்பு முதலீடுகளை செய்து வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த தேசமாக நாம் மாற்ற வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். திருச்சி புதிய விமான முனையம் மூலமாக 3 மடங்கு இணைப்பு வசதி கிடைக்கும்.
தமிழ்நாட்டில் ரயில் இணைப்பு வசதிகளை அதிகரிக்க 5 புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சாகர் மாலா திட்டத்தால் தமிழ்நாடு உள்பட தேசத்தின் பல்வேறு மாநிலங்களில் சாலைகள் துறைமுகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய பலம் கிடைக்கும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அதிக அளவில் நிதியை செலவு செய்து வருகிறது. கடற்கரை கட்டமைப்பின் முன்னேற்றம், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தனித்துறையே அமைத்துள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு ரூ.120 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். 2014ம் ஆண்டுக்கு முன்பு இருந்த 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இது இரண்டரை மடங்கு அதிகமாகும், என தெரிவித்துள்ளார்.
0
0