செப்.,1 முதல் சுங்கக்கட்டணம் உயர்வு… வெளிப்படைத் தன்மை இல்லா நடவடிக்கை ; கொந்தளிக்கும் அன்புமணி ராமதாஸ்..!!

Author: Babu Lakshmanan
30 August 2023, 1:29 pm

சென்னை ; தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும், சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி, சமயபுரம் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தது ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.150 உயர்த்தப்படவுள்ளது. உணவு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவது அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். அதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள்.

தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்கக்கட்டணத்தை உயர்த்துவது எந்த வகையிலும் நியாயமற்றது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 55 சுங்கச்சாவடிகளில் 27 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதமே சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டன. மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் இப்போது கட்டணம் உயர்த்தப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், சுங்கக்கட்டணத்தை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.

சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை. சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த ஐந்தாண்டுகளில் அந்த சுங்கச்சாவடியில் 2019 ஆகஸ்ட் முதல் 2020 ஜுன் வரை பயணித்த 1.17 கோடி ஊர்திகளில் 53% அதாவது 62.37 லட்சம் ஊர்திகள் மிக முக்கியமானவர்களின் ஊர்திகள் என்று அறியப்பட்டு அவற்றுக்கு கட்டண விலக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஒருபுறம் இதுபோன்ற தவறுகளும், முறைகேடுகளும் தொடர்வதை அனுமதித்து விட்டு, மறுபுறம் சுங்கக்கட்டணத்தை தொடர்ந்து உயர்த்துவது நியாயமற்றது.

பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போன்று, அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இதுவரை ஈட்டப்பட்டுள்ள வருவாய் குறித்து தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதில் தெரியவரும் முடிவுகளின் அடிப்படையில் தான் எந்தெந்த சுங்கச்சாவடிகளை தொடர வேண்டும், எவற்றை மூட வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். அத்தகைய தணிக்கை செய்து முடிக்கப்படும் வரை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும். வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்,என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ