சமூக நீதிக்கான அடித்தளமே இதுதான்… பெரியாரின் வாரிசு-னு வசனம் மட்டும் போதாது ; திமுக அரசு மீது அன்புமணி ஆவேசம்

Author: Babu Lakshmanan
24 November 2023, 4:51 pm

உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வர தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்திட கோரியும் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கறிஞர் செயற்பாட்டு குழு சார்பில் தொடர் முழக்க கூட்டம் கூட்டமாக சென்னை உயர்நீதிமன்ற ஆவின் நுழைவாயில் பகுதியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து செய்தியாளர்களிடம் பேசியது :- உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். உயர்நீதிமன்ற வழக்காடு வழியாக தமிழைக் கொண்டு வர வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறார்கள்.

சட்டமன்றத்தில் இதற்காக கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசியல் சாசன சட்டத்தில் 348 வது பிரிவு 2 இல் உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியை மாற்ற குடியரசு தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது. இரண்டாவது முறையாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா தமிழை வழக்காடு மொழியாக மாற்ற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.

ஆனால் அதன் பிறகு முன்னேற்றம் காணவில்லை.தற்போது நல்ல சூழல் இருக்கிறது. தற்போதைய முதலமைச்சர் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அழுத்தம் கொடுக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

இந்த நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் ஆதரவளிக்க வேண்டும். இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவிப்பார்கள். 48 சதவீதமாக இருந்த விளைநிலங்களின் பரப்பளவு 36 சதவீதமாக குறைந்து இருக்கிறது. விளைநிலங்கள் குறையாமல் தொழிற்சாலைகளை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 1950-60 ஆண்டுகளில் தமிழுக்காக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது போல, தற்பொழுதும் தமிழுக்கான போராட்ட நடத்த வேண்டும் என்றே வலியுறுத்தினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியது தவறானது. மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம். ஆனால், அதற்கான மனது தான் இல்லை. அரசு சென்செக்ஸ் மற்றும் சர்வே என்பதுக்கான வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை.

பீகாரில் நல்ல முறையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். பெரியாரின் வாரிசு சமூக நீதிக் கொள்கை என்று வசனம் பேசினால் போதாது. பல்வேறு மாநிலங்களில் சாதி வரி கணக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், தமிழ்நாட்டில் எடுப்பதற்கு உங்களுக்கு என்ன பிரச்சனை உள்ளது, இதுதான் சமூக நீதிக்கான அடித்தளம்,

சமூக நீதிக்கு கணக்கு எடுக்க முடியாதவர்கள், வேடந்தாங்கல் பறவைகள் சரணத்துக்கு எத்தனை பறவைகள் வருகிறது என்றும், தெருக்களில் எத்தனை மாடுகள் சுற்றி தெரிகிறது என்றும், மற்றும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை தர அதற்கான கணக்கெடுப்பு நடத்த முடிந்த உங்களால் ஏன் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியவில்லை.

திருவண்ணாமலையில் இதை விட பெரிய போராட்டங்களில் நடத்த முடியும், அரசு அதிகாரிகள் இதனை புரிந்து கொள்ள வேண்டும், மக்களை அழித்து செயல்படும் திட்டம் எங்களுக்கு வேண்டாம், கண்டிப்பாக உணவு பற்றாக்குறை ஏற்படும், வருங்கால சந்ததிகளுக்கு சோறு இருக்காது, தொழிற்சாலை வந்தால் சோருக்கு எங்கே செல்வது, தொழிற்சாலை கொண்டு வாருங்கள், ஒரு பக்கம் விளைநிலங்களை முன்னுரிமைப்படுத்துங்கள், என்றார்.

தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் மேடையில் பேசியதாவது :- தாய்மொழி தமிழை வாதாடும் மொழியாக மாற்ற வேண்டும், சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு வாரமாக இங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.
நம் தாய்மொழி தமிழை பாதுகாக்க வேண்டும் என கடந்த 40 ஆண்டு காலமாக மருத்துவர் ராமதாஸ் அய்யா போராடி வருகிறார்.

தமிழ்நாட்டில் இன்று தமிழ் மெல்ல தேய்ந்து கொண்டிருக்கிறது, மறைந்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டம் இரு கோரிக்கைக்கான போராட்டம். தமிழை பாதுகாக்க கடந்த 17 வருடமாக பல்வேறு கட்சியினர் அதற்கு நடவடிக்கை எடுத்தார்கள். கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் ராமதாஸ் ஐயா சொன்ன கோரிக்கைகளை கொண்டு வருவேன் என உறுதி அளித்தார்.

2006 இல் இந்த தீர்மானங்களை கலைஞர் கொண்டு வந்தார், பிறகு டெல்லிக்கு கொண்டு சென்றார். மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை அவர்கள் மொழியிலேயே வாதாடும் மொழியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இவ்வாறு இருக்கிறது. தேசிய அளவில் ஆட்சி மொழியாக தமிழை மாற்ற வேண்டும், இதற்கு மருத்துவர் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

தொடர்ந்து இதற்காக குரல் கொடுத்து வருகிறோம். தமிழை ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும். ஆங்கிலம் ஒரு இணைப்பு மொழி தான், சிலர் தவறாக இந்தியை தேசிய மொழி என்று புரிந்து கொண்டு பேசுகிறார்கள்.
உலகின் பழமையான மொழிக்கு சொந்தக்காரர்கள் நாம். இந்த பெருமை வேறு யாருக்கும் கிடைக்காது. இது பெருமை மட்டுமல்ல நம்முடைய ஆணவம்.

இந்த பெருமை யாருக்கும் கிடைக்காது. 28 மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் மட்டுமே அவனுடைய தாய்மொழியை படிக்காமலே பட்டம் பெறலாம். அது எந்த மாநிலம் என்றால் தமிழ்நாடு, எந்த ஒரு மாநிலத்திலும் தாய்மொழி படித்ததன் பட்டம் பெற முடியும். ஆனால் தமிழகத்தில் அப்படி கிடையாது, முனைவர் பட்டம் கூட இங்கு வாங்கலாம்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இது முக்கியமான போராட்டம், உயர்நீதிமன்றத்துக்கான போராட்டம் அல்ல, தமிழுக்கும், தமிழ் சமூகத்தின் போராட்டம். மோடி அவர்கள் இது போன்ற கோரிக்கை வலியுறுத்தல் மட்டும் போதாது நடைமுறைப்படுத்த வேண்டும். நேற்று அகமதாபாத்தில் பேசிய ஒரு நீதிபதி சொல்கிறார், விரைவில் நான் தமிழை கற்றுக்கொள்கிறேன் என்று,

இன்று நமக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும், இது சாதாரண ஆர்ப்பாட்டம் அல்ல, இது மிக முக்கியமான ஒரு போராட்டம், கட்சியை அப்பாற்பட்டு சமூகத்து அப்பாற்பட்டு இதில் நாம் இணைந்து போராட வேண்டும்,

முதலமைச்சர் வருகின்ற சட்டமன்ற கூட்டு தொடரில் இதற்கு தீர்மானம் கொண்டு வர வேண்டும், அனைத்து கட்சிகளும் டெல்லிக்கு செல்லலாம் வாருங்கள் நாங்களும் வருவோம் அழுத்தம் கொடுக்கலாம்,

கண்டிப்பாக மீண்டும் ஒரு தீர்மானத்தை கொண்டு வர வேண்டும், அனைவரும் சேர்ந்து இதற்கான அழுத்தத்தை கொடுத்து தொடர்ந்து போராடுவோம், தாய் மொழியை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைக்கு நாம் இப்போது வந்துள்ளோம், தாய்மொழிக்காக மீண்டும் நாம் போராட்டத்தை எடுக்க வேண்டும், அப்போதுதான் நமக்கு முழுமையான வெற்றி கிடைக்கும், என தெரிவித்துள்ளார்.

  • Game Changer story மதுரையில் நடந்த உண்மைச் சம்பவமே கேம் சேஞ்சர்.. எஸ்.ஜே.சூர்யா சுவாரஸ்ய பகிர்வு!
  • Views: - 305

    0

    0