5 மணி நேரத்தில் தயாரிக்கப்பட வேண்டிய பட்டியலை 53 நாட்களாகியும் தயாரிக்க முடியவில்லையா…? தமிழக அரசு மீது அன்புமணி ராமதாஸ் காட்டம்..!!

Author: Babu Lakshmanan
3 June 2023, 1:56 pm

தமிழ்நாட்டில் மதுவிலக்கிற்கான நல்லத் தொடக்கத்தை வகுக்க முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி சிறந்த நாள் வாய்க்காது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மொத்தமுள்ள 5329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் 12-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன்பின் இன்றுடன் 53 நாட்கள் ஆகும் நிலையில், இன்று வரை 500 மதுக்கடைகளை மூடும் நடவடிக்கையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பதை தமிழக அரசு அறிவிக்கவில்லை. அறிவிக்கப்பட்டவாறு மதுக்கடைகள் மூடப்படுமா… மூடப்படாதா? என்பது மர்மமாகவே இருக்கிறது.

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டவாறு மதுக்கடைகள் மூடப்படாதது ஏன்? என்று வினாக்கள் எழுப்பப்படும் போதெல்லாம், அரசுத் தரப்பிலிருந்து மனநிறைவு அளிக்கும் வகையில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. மூடப்பட வேண்டிய மதுக்கடைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என்ற ஒற்றை பதிலையே மீண்டும், மீண்டும் கூறி தமிழக அரசு காலம் கடத்தி வருகிறது. மதுக்கடைகளை மூடுவதில் கால தாமதம் ஏற்படுவதற்கு கணக்கெடுப்பு தான் காரணம் என்பதை ஏற்க முடியாது. 5 மணி நேரத்தில் தயாரிக்கப்பட வேண்டிய பட்டியலை 53 நாட்களாகியும் தமிழக அரசால் தயாரிக்க முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை.

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை படிப்படியாக மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். தமிழ்நாட்டில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது; அதனால் தான் தமிழ்நாட்டில் மது வணிகமும் அதிகரித்து வருகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தையும் கடந்து மது வணிகம் செய்வது மக்கள் நல அரசின் பணி அல்ல; மதுவின் தீமைகளில் இருந்து மக்களைக் காப்பது தான் மக்கள் நல அரசின் கடமை ஆகும். இதை தமிழ்நாடு அரசு உணர்ந்து அதன் மதுவிலக்குக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கிற்கான நல்லத் தொடக்கத்தை வகுக்க முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி சிறந்த நாள் வாய்க்காது. எனவே, கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளான இன்று, ஏற்கனவே வெளியிடப்பட்ட 500 மதுக்கடைகளை மூடும் அறிவிப்பை செயல்படுத்த வேண்டும். அவை தவிர மீதமுள்ள 4829 மதுக்கடைகளையும் கலைஞரின் நூற்றாண்டில் படிப்படியாக மூடி, 2024-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் நாள் கலைஞரின் நூற்றாண்டு நிறைவுக்குள் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும், என அவர் கூறியுள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!
  • Close menu