பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தது பாமக… எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு தெரியுமா..? வெளியான முக்கிய தகவல்
Author: Babu Lakshmanan18 March 2024, 7:50 pm
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க பாமக முடிவு எடுத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுக தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பணிகள் அனைத்தையும் முடித்து விட்டு, அடுத்து பிரச்சாரத்தில் கவனம் செலுத்த உள்ளது.
ஆனால், அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக கட்சிகள் இன்னும் கூட்டணியையே உறுதி செய்யாமல் இருந்து வருகிறது. இந்த முறை தனித்தனியே களமிறங்கும் அதிமுக, பாஜக கட்சிகள், தேமுதிக மற்றும் பாமகவை தங்கள் பக்கம் இழுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் எந்த உடன்பாடும் ஏற்படாமல் இருந்து வந்தது. குறிப்பாக, ராமதாஸ் அதிமுக கூட்டணியையும், அன்புமணி பாஜக கூட்டணியையும் விரும்புவதாக சொல்லப்படுகிறது. இதனால், பாமகவில் குழப்பம் நீடித்து வருவதாகவும் கூறப்பட்டது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய கட்டாயம் பாமகவுக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், பாமக உயர்மட்டக் குழு, மாவட்ட செயலாளர்களின் அவசரக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிடும் என முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், “பாஜக கூட்டணி அமைப்பது கட்சியின் நலனுக்கு உகந்தது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள், வேட்பாளர்கள் என்பது குறித்து நாளை மறுநாள் ராமதாஸ் அறிவிப்பார்,” எனக் கூறினார்.
பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10+1 சீட்டுகள் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0
0