இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதா..? குழப்பத்தை ஏற்படுத்திய தமிழக அரசு : அலர்ட் கொடுக்கும் அன்புமணி
Author: Babu Lakshmanan5 February 2022, 11:10 am
சென்னை : தேசியத் தகுதித் தேர்வு நடைபெறும் அதே நாளில் தமிழக ஆசிரியர் தேர்வையும் அறிவித்திருப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக தமிழக அரசுக்கு பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது : – பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வில் (NET) கணிதப் பாடத் தேர்வு பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதேநாளில், அதே கணிதப் பாடத்திற்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது!
தேசியத் தகுதித் தேர்விலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்விலும் கணிதப்பாடத் தேர்வை எழுதுபவர்கள் ஒரே போட்டியாளர்கள் தான். இரு தேர்வுகளும் ஒரே நாளில் நடத்தப்பட்டால், ஏதேனும் ஒரு தேர்வை எழுதும் வாய்ப்பு போட்டியாளர்களிடமிருந்து பறிக்கப்படும். இது அநீதியானது!
தேசியத் தகுதித் தேர்வுக்கான அட்டவணை ஜனவரி 17-ஆம் தேதியே வெளியிடப்பட்டு விட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய அட்டவணை பிப்ரவரி 3-ஆம் தேதி தான் வெளியானது. தேசியத் தகுதித் தேர்வு நாளில், ஆசிரியர் தேர்வு வாரியம் கணிதப் பாடத் தேர்வை அறிவித்தது தான் குழப்பங்களுக்கு காரணம் ஆகும்!
தேர்வு அட்டவணை தயாரிப்பது, முடிவுகளை வெளியிடுவது, இட ஒதுக்கீடு வழங்குவது என அனைத்திலும் ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பின்றி நடந்து கொள்கிறது. இரு வகை தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்க வசதியாக கணிதப் பாடத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்தி வைக்க வேண்டும்!, என தெரிவிக்கப்பட்டுள்ளது.