நினைச்சு கூட பார்க்க முடியல… விவசாயிகளின் வாழ்வாதாரம் என்னாகும்..? தமிழக அரசுக்கு அன்புமணி விடுத்த கோரிக்கை..!!

Author: Babu Lakshmanan
12 October 2023, 2:35 pm

கோயில் விளைநிலங்களுக்கான குத்தகை நெல் பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான நன்செய் நிலங்களில் விவசாயம் செய்து வரும் உழவர்கள், சில ஆண்டுகளாக குத்தகை நெல்லை செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதைக் காரணம் காட்டி, அந்த நிலங்களை பறிக்கும் செயலில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டிருக்கிறது. உழவர்களின் சூழலைப் புரிந்து அவர்களுக்கு உதவாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களின் பெயர்களில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. அவற்றை அந்தந்த பகுதியில் உள்ளவர்கள் பரம்பரை பரம்பரையாக குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். அவ்வாறு விவசாயம் செய்யப்படும் நிலங்களுக்கான குத்தகையாக அறுவடை மூலம் கிடைக்கும் நெல்லின் ஒரு பகுதியை வழங்குவார்கள். இது தான் காலம் காலமாக தொடர்ந்து வரும் நடைமுறை ஆகும். இதில் தவறு நடக்க வாய்ப்பில்லை.

கடந்த சில பத்தாண்டுகளில் ஒருசில ஆண்டுகளைத் தவிர மீதமுள்ள ஆண்டுகளில் கடுமையான வறட்சி மற்றும் அளவுக்கு அதிகமான மழையால் விவசாயம் சரி வர நடைபெறவில்லை. இன்னும் பல ஆண்டுகளில் இயற்கை சீற்றத்தால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு, உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அதனால் உழவர்களால் கோயில்களுக்கு குத்தகை நெல்லை வழங்க முடியவில்லை. இதில் உழவர்களின் தவறு எதுவும் இல்லை. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட இழப்பால் தான் நெல்லை வழங்க முடியவில்லை.

உரிய விளைச்சல் கிடைக்காத காலங்களில் உழவர்களால் குத்தகை வழங்க முடியாது என்பது தான் இயல்பு என்பதால், இயற்கைச் சீற்றக் காலங்களில் குத்தகை நெல் வழங்குவதை கோயில் நிர்வாகங்களே தாங்களாக முன்வந்து தள்ளுபடி செய்வது தான் இயற்கையான நீதியாக இருக்கும். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு, குத்தகை நெல் செலுத்த முடியாத உழவர்களும், தங்களின் இயலாமையை காரணம் காட்டி, குத்தகை நெல் பாக்கியை தள்ளுபடி செய்யுமாறு பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்காத இந்து சமய அறநிலையத்துறையும், கோயில் நிர்வாகங்களும் குத்தகை நெல் பாக்கி வைத்துள்ள உழவர்களிடமிருந்து விளைநிலங்களை மீட்டு, பொது ஏலம் விடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. இது எந்த வகையிலும் நியாயம் இல்லை. கோயில் நிலங்களில் சாகுபடி செய்து, பேரிடர் காலங்களில் குத்தகை நெல்லை கூட அளக்க முடியாத நிலையில் உள்ள உழவர்களிடமிருந்து நிலங்களைப் பறித்துக் கொண்டால் வாழ்வாதாரம் என்ன ஆகும்?

காவிரி பாசன மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படும் நிலங்களில் மூன்றில் இரு பங்கு நிலங்கள், அதாவது 8 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள், கோயில் நிலங்கள் ஆகும். இவை அனைத்தும் உழவர்களிடமிருந்து பறிக்கப்பட்டால், லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது ஒருபுறமிருக்க, காவிரி பாசன மாவட்டங்களில் நெல் சாகுபடியிலும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும். அதைக் கருதியாவது இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்.

உண்மையில் கோயில் நிலங்களில் சாகுபடி செய்யும் உழவர்களைக் காக்க வேண்டிய பெருங்கடமை திமுகவுக்கு உண்டு. கடந்த 2005&ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தஞ்சாவூர் மண்டல திமுக மாநாட்டில், கோயில் நிலங்களில் சாகுபடி செய்யும் உழவர்களின் குத்தகை நெல் பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் இருமுறை ஆட்சிக்கு வந்த திமுக உழவர்களின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தது. ஆனால், குத்தகை நெல் பாக்கியை தள்ளுபடி செய்யத் தவறிவிட்டது. அது தான் உழவர்கள் எதிர்கொள்ளும் எல்லா சிக்கல்களுக்கும் காரணமாகும்.

எனவே, கோயில் நில குத்தகை உழவர்களின் வாழ்வாதாரத்தையும், நலனையும் கருத்தில் கொண்டு குத்தகை நெல் பாக்கி தொடர்பான வழக்குகளில் இருந்து விடுவிக்கவும், குவிந்து கிடக்கும் குத்தகை நெல் பாக்கியை தள்ளுபடி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் கோயில் நில குத்தகை உழவர்களை மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து காக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 389

    0

    0