வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் அலுவலகத்தில் அடாவடி.. டிடிவி தினகரன், அமமுக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு!!
Author: Babu Lakshmanan28 March 2024, 1:11 pm
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக டிடிவி தினகரன் மற்றும் ஏராளமான அமமுக நிர்வாகிகள் மீது தேனி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தேனி ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான நேற்று டிடிவி தினகரன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய மாலை 2 மணி அளவில் வருகை தந்தார். தேனி அன்னஞ்சி விளக்கிலிருந்து தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு 100 மீட்டர் வரை டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஊர்வலமாக வர போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.
இந்நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி, டிடிவி தினகரன் பிரச்சார வாகனத்தில் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைய முயன்றதால், காவல்துறையினருக்கும் டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
பின்னர், அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு டிடிவி தினகரன் பிரச்சார வாகனம் மற்றும் அவருடன் ஏராளமானோர் போலீசாரின் தடுப்புகளை மீறி உள்ளே சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அமமுக தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன், அமமுக நிர்வாகி ராம் பிரசாத், மற்றும் ஏராளமான அமமுக கட்சி நிர்வாகிகள் மீது தேனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, அவரது வேட்பு மனு மீதான பரிசீலனையை தேர்தல் அதிகாரி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.