விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு… உடலை ஒப்படைக்க மறுப்பது ஏன்..? நியாயம் கிடைக்குமா..? சந்தேகத்தை கிளப்பும் அண்ணாமலை …
Author: Babu Lakshmanan21 April 2022, 9:45 am
சென்னை : சென்னையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நியாயம் கிடைக்கச் செய்வாரா..? என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை தடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸார் நேற்று முன்தினம் இரவு புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த இளைஞர்கள் 2 பேரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அந்த சமயம், போலீசார் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்துள்ளனர். மேலும், அவர்கள் போலீசாரை தாக்கி விட்டு தப்பித்து ஓடவும் முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்களிடம் கத்தியும், கஞ்சாப் பொட்டலமும் இருந்ததாம். இதையடுத்து, பிடிபட்ட திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ் (28), பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்(28) ஆகியோரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், இவர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், நேற்று காலை விக்னேஷுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை போலீஸார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் விக்னேஷின் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், “விசாரணை என்ற பெயரில் போலீஸார் விக்னேஷை அடித்துக் கொன்றுவிட்டதாகவும், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர். ஆனால், வலிப்பு ஏற்பட்டதால்தான் விக்னேஷ் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, விக்னேஷ் மர்மமரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நியாயம் கிடைக்கச் செய்வாரா..? என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “சென்னையில் காவல்துறை விசாரணையின்போது, மர்மமான முறையில் விக்னேஷ் என்கின்ற இளைஞர் உயிரிழந்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது!
அவருடைய உடலையும் குடும்பத்தினருக்கு ஒப்படைக்க மறுப்பது மனிதாபிமானமற்ற செயல். முதலமைச்சர் ஸ்டாலின் கவனம் கொடுத்து நியாயம் கிடைக்க செய்வாரா?,” எனக் குறிப்பிட்டுள்ளார்.