ராமர், சீதை குறித்து அவதூறு… தீயாய் பரவிய வீடியோ… பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது பாய்ந்த 5 வழக்குகள்…!!
Author: Babu Lakshmanan9 May 2023, 11:31 am
இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆர்கே புரத்தில் நடந்த கலைத்திருவிழா எனும் நிகழ்ச்சியில் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ‘மலக்குழி மரணம்’ எனும் தலைப்பில் கவிதை ஒன்றை வாசித்த அவர், அதில் இந்து கடவுள்களான ராமர், லட்சுமணர் மற்றும் ஹனுமன், சீதையை இழிவுபடுத்தும் விதமான வரிகளை கூறினார்.
அவரது இந்தப் பேச்சுக்கள் அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட நிர்வாகி சுரேஷ் போலீஸில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், கலகத்தை தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், விடுதலை சிகப்பி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.