நவ.,6ல் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம்… காவல்துறை அனுமதி… மாவட்டங்களுக்கு டிஜிபி போட்ட உத்தரவு..!!
Author: Babu Lakshmanan31 October 2022, 2:23 pm
தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
அக்.,2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அனுமதி கோரி விண்ணப்பித்தும், டிஜிபி உள்ளிட்டோர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. எனவே, அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,அக்டோபர் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆனால், சட்டம் – ஒழுங்கு பிரச்சனை காரணமாக பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இது தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தமிழகத்தில் வரும் நவம்பர் 6-ந் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்குமாறு மாவட்ட போலீசாருக்கு தமிழக டி.ஜி.பி. அறிவுறுத்தியுள்ளார்.