அதிமுக அலுவலகத்திற்கு செல்ல ஓபிஎஸ் தரப்பு அனுமதி மறுப்பு ; இபிஎஸ்-ஐ யாராலும் தடுக்க முடியாது.. போலீசார் சொன்ன விளக்கம்..!!
Author: Babu Lakshmanan9 September 2022, 11:25 am
சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. கடந்த ஜுலை 11ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அதேவேளையில், அதிமுக அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் நுழைந்ததால், அங்கு கலவரம் ஏற்பட்டது. அதிமுக ஆவணங்கள் எல்லாம் எடுத்துச் செல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப் படுவதாக பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது போன்ற பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மாறுபட்ட தீர்ப்புகள் அளிக்கப்பட்டன. அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி அளித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக நேற்று அதிமுக அலுவலகத்திற்கு சென்றார் எடப்பாடி பழனிசாமி.
இதனிடையே, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய இந்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு சென்றது ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும், அதிமுக அலுவலகத்திற்கு செல்ல ஓ.பி.எஸ் தரப்பினரும் காய் நகர்த்தி வருகின்றனர். இதற்காக ராயப்பேட்டை உதவி ஆணையர் சார்லசிடம் முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓ.பி.எஸ்.சின் தீவிர ஆதரவாளருமான ஜே.சி.டி. பிரபாகர் மனு ஒன்றை அளித்துள்ளார்.
ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிமுக அலுவலகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறி இருப்பதாவது:- அதிமுக அலுவலகத்தில் ஏற்கனவே நடைபெற்ற மோதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நீங்கள் (ஓ.பி.எஸ். தரப்பினர்) மீண்டும் அங்கு செல்வதால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே தற்போதைய சூழலில் நீங்கள் அங்கு செல்வதற்கு அனுமதி அளிக்க முடியாது.
அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையின் போது சீலை உடனடியாக அகற்றி அலுவலக சாவியை எடப்பாடிபழனி சாமி தரப்பினரிடம் ஒப்படைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி அ.தி.மு.க. தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வசமே இருந்து வருகிறது. இதன் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்துக்கு சென்றிருக்கிறார். இதன் மூலம் அ.தி.மு.க. தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதையே கோர்ட்டு உறுதி செய்துள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் வந்த தீர்ப்பும், பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே வந்துள்ளது. இப்படி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தற்போதைய சூழல்கள் உள்ளன. இதனால் அவர் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் செல்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தற்போதைய சூழலில் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் நீங்கள் செல்வதாக இருந்தால் உரிய சட்ட அனுமதியை வாங்கி வந்த பிறகு செல்வதே சரியாக இருக்கும்,என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.