மின் கட்டண உயர்வு; இதுதான் விடியல் அரசா? சாடியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள்,..
Author: Sudha16 July 2024, 9:24 am
தமிழக அரசின் மின் கட்டண உயர்வு அறிவிப்பை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மின் கட்டண உயர்வை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடியுள்ளார்.மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த விடியா அரசுக்கு என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “சொன்னதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன் என்று மேடைதோறும் வாய் கிழியப் பேசிய மு.க.ஸ்டாலின் அவர்களே- மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை; சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள்” என்று குற்றம்சாட்டினார்.மேலும், “திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம். மக்களை வாட்டி வதைப்பதே திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது. மின்சாரத்தை தடையின்றி வழங்கும் திறனின்றி, மின் கட்டணத்தை மட்டும் மீண்டும் மீண்டும் உயர்த்தும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் க கிருஷ்ணசாமி குறிப்பிடும் போது தமிழகத்தில் மீண்டும் கடும் மின் கட்டண உயர்வு!
நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு இதுதான் இந்த அரசு கொடுக்கும் பரிசா?
தமிழக மக்கள் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வாலும், ஏற்கனவே தமிழக அரசால் உயர்த்தப்பட்ட வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டண உயர்வுகளாலும் பெரும் துன்பப்பட்டு வருகிறார்கள்! இந்நிலையில் குடிசை வாசிகள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அனைத்து மின் பயன்பாட்டாளர்களும் பாதிக்கும் வகையில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல; மின்கட்டண உயர்வு கடும் கண்டனத்துக்குரியதாகும்.
நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியாக ஆளும் தரப்பினருக்கு வாக்களித்த மக்களுக்கு மின் கட்டண உயர்வு தான் ஆட்சியாளர்கள் தரும் பரிசா? உடனடியாக மின் கட்டணத்தை உயர்வை திரும்ப பெற புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் மின்கட்டண உயர்வை தேர்தல் முடிவடைந்த பிறகு ஜூலை 15-ஆம் தேதி அறிவித்திருப்பதில் இருந்தே உணரலாம் என கூறியுள்ளார். மின் வாரியத்தில் நிலவும் ஊழல், முறைகேடுகளை களையாமல் மின்சாரக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதால் எந்தப் பயனும் இல்லை எனவும், ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மின் கட்டண உயர்வால் கடுமையாக அவதியடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை குறைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.