சென்னை நகரில் வாக்குப்பதிவு படுமந்தம் : திமுக அரசு மீது அதிருப்தியா?
Author: Udayachandran RadhaKrishnan20 February 2022, 11:06 am
தமிழகத்தின் 21 மாநகராட்சிகளில் மிகப் பெரியது, சென்னை. அதனால்தான் அதற்கு பெருநகர சென்னை என்ற சிறப்பு பெயரும் உண்டு.
சிங்கார சென்னை
சென்னை நகரில் வசிப்போரில் 90.34 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றவர்கள். நகரில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என 350க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும் உண்டு.

இது தவிர வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 50-க்கும் மேற்பட்ட பிரபல மென்பொருள் கம்பெனிகளும் இருப்பதால் என்ஜினீயரிங் படிப்பை முடித்தவர்களின் கனவு நகரமாகவும் சென்னை திகழ்கிறது.
இப்படி பல்வேறு பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகும்போது தேர்தல் என்றால் மட்டும் சென்னை நகரவாசிகளில் பெரும்பாலானோர் வாக்குச்சாவடி பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை என்பது கசப்பானதொரு உண்மையாக உள்ளது.
வாக்குப்பதிவில் மந்தமான சென்னை
2016, 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் நேற்று நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில் சென்னை நகரவாசிகள் மட்டும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதில் மற்ற மாவட்ட மக்களை விட மிகவும் பின்தங்கி இருப்பது சமூக ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சி தருவதாக உள்ளது.
சென்னையில் மொத்தம் உள்ள 61 லட்சத்து 31 ஆயிரத்து 112 வாக்காளர்களில், 26 லட்சத்து 90 ஆயிரம் பேர் மட்டுமே ஓட்டு போட்டுள்ளனர். அதாவது வெறும் 44 சதவீத வாக்குகள் மட்டுமே சென்னை மாவட்டம் முழுவதும் பதிவாகியுள்ளது. 56 சதவீதம் பேர் ஓட்டு போடவே இல்லை.
ஏமாற்றம் தரும் சென்னை மக்கள்
தேர்தல் நாளில் வாக்களிக்க மறப்பது சென்னை நகர மக்களுக்கு புதிய விஷயம் அல்ல. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 55.27 சதவீதமும், 2019 மக்களவைத் தேர்தலில் வட சென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் சேர்த்து
59.50 சதவீத வாக்குகள்தான் பதிவாயின. 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் சென்னை மாவட்டத்தில் 59.10 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தது, குறிப்பிடத்தக்கது.
வாக்களிக்காத நடிகர்கள்
இதில் வேதனை தரும் ஒரு விஷயம் என்னவென்றால் சென்னை மாநகராட்சி வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் சூழ்நிலை காரணமாக நடிகர்கள்
ரஜினிகாந்த், அஜித், தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்களிக்கவில்லை என்பதுதான். இப்படி வாக்குப்பதிவு 44 சதவீதமாக குறைந்து போனதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
அரசியல் பார்வையாளர்கள் கருத்து
இதுபற்றி அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது, “கடந்த நவம்பர் மாதமும், டிசம்பர் மாதமும் கொட்டி தீர்த்த கன மழையால் சென்னை நகரிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. 500க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியும் நின்றது. இதை அகற்றுவதில் மாநகராட்சி
மிக மந்தமாக செயல்பட்டது. இதனால் 15 நாட்கள் ஆகியும் ஏராளமான தெருக்களில் மழைநீர் அகற்றப்படாததால் அது கழிவு நீராக மாறி துர்நாற்றம் வீசவும் செய்தது.
பல இடங்களில் மாநகராட்சி சார்பில் விடப்பட்ட மீட்பு படகுகள் மூலமே சென்னை நகரவாசிகள் அலுவலகமும் வெளியேயும் சென்று வரவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. தவிர ஒரு வாரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் இருளில் மூழ்கிக் கிடந்த வேதனை காட்சிகளையும் பார்க்க முடிந்தது. கடந்த 100 ஆண்டுகளில் சென்னை நகரவாசிகள் சந்திக்காத ஒரு இக்கட்டான நிலைமை இது.
சமூக போராளிகளாக தங்களை அடையாளப் படுத்திக்கொண்ட நடிகர்களிடமிருந்து
எதிர்பார்த்த நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை. அவர்களெல்லாம் வெள்ளத்தால் சென்னை நகர மக்கள் பாதிக்கப்பட்டபோது எங்கே போனார்கள் என்பதும் தெரியவில்லை.
விரக்தியில் வாக்களிக்காத மக்கள்?
இதனால் யாருக்கு வாக்களித்து என்ன ஆகப்போகிறது? என்ற விரக்தியில் ஏராளமானோர் தங்களது வாக்குகளை பதிவு செய்யவில்லை என்று யூகிக்கவும் தோன்றுகிறது.
அரசு மீது அதிருப்தி
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அப்போதைய அதிமுக அரசு 2500 ரூபாய் பரிசுப் பணம் கொடுத்தது போல் இப்போது கொடுத்திருந்தால் தங்களின் வாழ்வாதாரம் ஓரளவுக்கு மேம்பட்டு இருக்குமே என்ற எண்ணத்தில் கூட சென்னை நகரவாசிகள் வாக்களிக்காமல் போய் இருக்கலாம். குறிப்பாக 13 லட்சம் பெண்கள் மட்டுமே வாக்களித்து இருப்பதைப் பார்த்தால் இப்படியொரு சிந்தனை எழுவதை தவிர்க்க முடியவில்லை.
முந்தைய காலங்களில் உயிரிழந்தோர், வீடு மாறியோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாமல் இருந்தன. தேர்தல் அலுவலர்கள் வீடு வீடாக நடத்திய சோதனையில், அத்தகைய நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. சொந்த ஊரில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், சென்னையில் வசிக்கும் இடத்திலும் பலர் வாக்காளர் அட்டை வைத்திருந்தனர்.
இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் சார்பில் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் இணையதளம் வழியாக முகவரி, புகைப்பட ஒற்றுமை அடிப்படையிலும் இரு இடங்களில் வாக்காளர் அட்டை வைத்திருந்தது கண்டுபிடித்து நீக்கப்பட்டன. அதன் பிறகும் கூட வாக்கு சதவீதம் உயரவில்லை.
கொரோனாவுக்கு பயந்து வாக்களிக்காத மக்கள்!!
கொரோனா தொற்று பரவும் வேகம், தமிழகம் முழுவதும் கட்டுக்குள் வந்து விட்டாலும் கூட சென்னை நகரில் தினமும் 200 பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்ற நிலை இன்றும் காணப்படுகிறது. இதற்குப் பயந்து இளம் வயதினரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஓட்டு போடவில்லை என்பதும் தெரிகிறது.
தவிர அண்மைக்காலமாக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், தேர்தலுக்குப் பிறகு மக்களை சந்திக்க வருவதும், அவர்களின் குறைகளைக் கேட்பதும், தீர்ப்பதும் குறைந்து போய்விட்டது. நாம் வாக்களிப்பதால், அரசியல்வாதிகளுக்குத்தான் நன்மை. மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அதனாலேயே அவர்கள் வாக்களிக்க செல்லவில்லை என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.
சென்னையில் வாக்குப்பதிவு தொடர்ந்து குறைந்த அளவில் பதிவாகி வருவதற்கு மக்களின் சோம்பேறித்தனமும், அலட்சியமும்தான் காரணம். தற்போது, அவர்களுக்கு கொரோனாவும் ஒரு சாக்காக அமைந்துவிட்டது.
சட்டங்களை அரசியல்வாதிகள் நீர்த்துபோகச் செய்வதால் வாக்களிக்க செல்லவில்லை என்று சொல்பவர்கள், நல்லவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பவாவது ஓட்டுப்போட வரவேண்டும்.
ஊருக்குள் இருந்தும் வாக்களிக்காத மக்கள்!!
இந்த தேர்தலில் ஓட்டு போடுவதற்காக வெளிநாட்டில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் விமானம் மூலம் பறந்து வந்து ஓட்டு போடுபவர்கள் உள்ள நிலையில் ஊருக்குள் இருந்துகொண்டே வாக்களிக்கவில்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை?…
அதேநேரம் பெரும்பான்மையான சதவீதம் பேர் ஓட்டு போடாத நிலையில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் நல்லது” என்று ஆதங்கத்துடன் அந்த அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
தேர்தலில் தவறாமல் வாக்களிக்கவேண்டும் என்கிற ஜனநாயக கடமையை சென்னை நகரவாசிகள் உணர்ந்து கொள்வார்களா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்!