நகைக் கடன் தள்ளுபடி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணிடம் இப்படியா நடப்பது…? உதயநிதிக்கு எதிராக பொங்கிய பொன்.ராதாகிருஷ்ணன்!!

Author: Babu Lakshmanan
11 February 2022, 1:43 pm

தஞ்சை : நகை கடன் தள்ளுபடி செய்யாதது குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் கேள்வி கேட்ட பெண்ணை தரம் தாழ்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று தஞ்சை வந்த அவர் 51 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் விக்னேஷ் குமார் ராஜாவுக்கு வாக்கு சேகரித்தபோது அந்த பகுதியில் கிடந்த குப்பைகளை பாஜக நிர்வாகிகள் உடன் இணைந்து பொன் ராதாகிருஷ்ணன் அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து, அவர் பேசியதாவது :- இது சவால் நிறைந்த தேர்தல். செல்லுமிடமெல்லாம் மக்கள் ஆர்வமாகக் கூடி வருவது மட்டுமல்லாமல், பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க முனைப்புடன் பணியாற்றி உள்ளனர். எனவே, இந்தத் தேர்தல் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் வகையில் இந்தத் தேர்தலை பாஜக சந்தித்து வருகிறது.

அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், குடிநீர், சமையல் எரிவாயு, திருமண நிதி உதவி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வெகுமதி உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் நிறைவேற்றி வருகிறார். தஞ்சாவூர் மாநகரில் பிரதமரின் பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் மேம்பாட்டு பணிக்காக ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த அளவுக்குப் பணிகள் சிறப்பாக நடைபெறவில்லை. இதை சரி செய்யும் வகையில் மாமன்றத்தை அலங்கரிக்க வேண்டுமானால், பாஜக வெற்றி பெற வேண்டும் என்றார் பொன் ராதாகிருஷ்ணன்.

udhayanidhi - updatenews360

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், உதயநிதி ஸ்டாலின் தான் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் என்பதை உணர வேண்டும். தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது நகைக் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு கோரிய பெண்ணை மிக மோசமான கேவலமான விமர்சனம் செய்துள்ளார். இதற்காக உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும், என்றார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!