‘எஸ்.பி என்ன பண்றாரு, அவருக்கு போன் போடு’… எல்லாமே டிராமா..? அமைச்சர் மனோ தங்கராஜ் மீது பாஜக விமர்சனம்

Author: Babu Lakshmanan
23 May 2023, 5:06 pm

அமைச்சர் மனோ தங்கராஜ் செக்போஸ்டில் செய்த ஆய்வு வீடியோ டிராமா நடத்தியது போல் தெரிவதாக நாகர்கோவிலில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் முன்னாள் மத்திய இணையமைச்சர். பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் பலர் உயிரிழந்த விஷயத்தில் நீண்ட காலத்துக்கு பிறகு இது போன்ற சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.

இதற்கு காவல்துறை எஸ்பி உள்ளிட்டோரை முதல்வர் சஸ்பெண்ட் செய்து உள்ளதை பார்க்கின்ற போது, இதே காவல்துறை அதிகாரிகள் வெவ்வேறு மாவட்டத்தில் பணியாற்றி உள்ளனர். அங்கு எல்லாம் இந்த கள்ளசாராயம் தலையெடுக்கவில்லை. அதை பார்க்கின்ற போது காவல்துறையினர் மீது தவறில்லை. அதை கவனிக்க தவறிய காவல்துறையை கையாள்கின்ற முதல்வரின் தவறு.

குமரி மாவட்டத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்ற கனிம வளங்களில் இருந்து பெருமளவு பங்கு ஆளுங்கட்சியை சார்ந்தவர்களுக்கு சேருகிறது. அதேபோன்று, தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழக எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட போது, அதிகப்படியான டாரஸ் லாரிகளை ஏன் விடுகிறீர்கள் என போலீசாரிடம் கேள்வி கேட்பதும், எல்லா லாரி டிரைவர்களிடம் சாவிகளை வாங்குங்க என அவர் பேசுவதும், எஸ்.பி என்ன பண்றாரு, அவருக்கு போன் போடு என வெளியான வீடியோ அவர் டிராமா நடத்தியது போல் தெரிகிறது.

அமைச்சர் மனோ தங்கராஜ் நினைத்தால் கலெக்டர், எஸ்பி என பலரையும் உடனடியாக எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். அப்போதெல்லாம் அவர்களிடம் இது போன்று பிரச்சனைகள் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டீர்களா..? நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்ட பிறகும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது, அதிகாரிகளை சார்ந்ததா..? அல்லது அமைச்சரை சார்ந்ததா..?

படித்தவர்கள் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் கடப்பாரையை எடுத்து காது குத்தும் வேலையை அமைச்சர் இனிமேல் செய்ய வேண்டாம். கன்னியாகுமரி மாவட்ட அமைச்சர் பொய் பேசுவதை விட்டுவிட்டு, களப்பணியில் இறங்க வேண்டும். கனிம வள கடத்தலை தடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த அமைச்சர் இந்த மாவட்டத்துக்கு தேவை இல்லை என குமரி மாவட்ட மக்கள் போராடும் நிலை ஏற்படும். அதற்கு பா.ஜ.க ஆதரவு கொடுக்கும், எனவும் தெரிவித்துள்ளார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…