அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து வாலிபர் மற்றும் பெண் பலி.. மின்துறையில் அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்!!

Author: Babu Lakshmanan
20 June 2022, 8:01 pm

புதுச்சேரியில் மின்துறை அலட்சியத்தால் மின்கம்பி அறுந்து விழுந்ததில், வாலிபர் மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை அக்ரகாரம் வீதியைச் சேர்ந்தவர் செல்வி (60). இவர் தனது மகன் கணேசன் (21), மகள் சரண்யா மற்றும் தனது உறவினர் தேன்மொழி (40) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இவர்களது வீட்டின் அருகே தாழ்வாக சென்ற மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனை கவனிக்காத கணேசன், மின்கம்பியை மிதித்தபோது அவர் மீது மின்சாரம் தாக்கியது.

இதனை பார்த்த கணேசனின் சித்தி தேன்மொழி, அவரை காப்பாற்ற முயன்றபோது, அவர் மீதும் மின்சாரம் தாக்கி இருவரும் பலத்த காயமடைந்தனர். உடனே அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு ஆபத்தான நிலையில் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

மேலும் கணேசனின் தாய் செல்வி மற்றும் சரண்யா ஆகிய இருவருக்கும் லேசான காயங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே தாழ்வாக சென்ற மின்கம்பி குறித்து மின்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததாலும், மின்துறை அலட்சியத்தால் கணேசனும், தேன்மொழியும் உயிரிழந்ததாகக் கூறி அவர்களது உறவினர்கள் முத்தியால்பேட்டை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் முத்தியால்பேட்டை போலிசார் பேச்சு வார்த்தை நடத்தி கலைய செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டதால் சுமார் அரை மணி நேரம் முத்தியால்பேட்டை மகாத்மா காந்தி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1314

    0

    0