அதுக்கு வாய்ப்பே இல்ல… முதலமைச்சர் ஸ்டாலின் படித்து தெரிந்து கொள்ளட்டும் ; ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்..!!

Author: Babu Lakshmanan
14 March 2024, 4:27 pm

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்பவர்கள், இந்த சட்டத்தை முதலில் படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி சார்பில் மருத்துவத் திறன் மற்றும் உருவக நிழல் பயிற்சி பட்டறை ஜிப்மர் வளாகத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் பயிற்சியில் உயிர் மீட்பு சிகிச்சை மற்றும் விபத்துக்கான முதல் உதவி சிகிச்சை முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி முகாம் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சராக பதவி ஏற்றுள்ள திருமுருகன் எந்தத் துறை கொடுத்தாலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். அவருக்கு என்ன இலாக்கா ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் முடிவு செய்வார், என்று குறிப்பிட்டார்.

சி.ஏ.ஏ. சட்டம் என்பது குடியுரிமையை பறிப்பது அல்ல, குடியுரிமை கொடுப்பது என்று விளக்கம் அளித்த அவர், சட்டத்தோடு அனைவருக்கும் குடியுரிமை வழங்குவது தான் இந்த சட்டத்தின் நோக்கம் என்றும், தமிழிசை இந்த சட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்த மாட்டோம் என்று சொல்வதற்கு வேலை இல்லை இது மத்திய அரசின் திட்டம், என்றார்.

சி.ஏ.ஏ. சட்டம் சிறுபான்மையினர் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவே கொண்டுவரப்பட்டது, இந்த சட்டத்தை சிறுபான்மை மக்கள் வரவேற்று இருக்கிறார்கள், சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்பவர்கள் இந்த சட்டத்தை முதலில் படித்து புரிந்து கொள்ள வேண்டும், என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை பற்றி குஷ்பு பேசிய கருத்துக்கள் திரித்து கூறப்பட்டு இருக்கலாம், ஆனால் அவர் எந்தவித உள்நோக்கத்தோடும், இதை சொல்லி இருக்க மாட்டார், என்றும் தமிழிசை விளக்கம் அளித்தார்.

இந்த பயிற்சியில் புதுவையில் பணியாற்றும் காவலர்கள் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தேசிய மாணவர் படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி