பொங்கல் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்க திமுக அரசு திட்டமா…? மக்களிடம் எகிறிய எதிர்பார்ப்பு… பரபரக்கும் அரசியல் களம்!!
Author: Babu Lakshmanan1 January 2024, 9:16 pm
2024 ஆங்கில புத்தாண்டு இன்று உலகம் முழுவதும் பிறந்துவிட்டது.
நமது இந்தியாவுக்கோ இது நாடாளுமன்றத் தேர்தல் ஆண்டு.
இதனால் இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகை தமிழக மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி விட்டுள்ளது. பொங்கலை மிகுந்த அனைவரும் உற்சாகத்தோடு கொண்டாடும் விதமாக திமுக அரசு ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டைதாரருக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கும் என்ற நம்பிக்கையை எகிற வைத்தும் இருக்கிறது.
ஏனென்றால் 2021 பொங்கல் பண்டிகைக்காக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தலா 2,500 ரூபாயுடன் பச்சரிசி, சர்க்கரை, செங்கரும்பு ஆகியவற்றையும் பரிசுத் தொகுப்பாக வழங்கி அரிசி கார்டுதார்கள் அனைவரையும் குதூகலப்படுத்தியது.
ஆனால் அதே ஆண்டு நடந்த தமிழக தேர்தலுக்குப் பிறகு 2022ம் ஆண்டு பொங்கலுக்கு ரொக்கமாக பணம் எதுவும் வழங்கப்படவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு பதிலாக 21 வகையான பொருட்களுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பை அறிவித்தார். எனினும் இதில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமற்று இருப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் திமுக அரசு அடுத்த ஆண்டே தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.
மேலும் 2023 பொங்கல் பரிசாக 1000 ரூபாயும் அத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என்று அறிவிப்பை, முதலமைச்சர் ஸ்டாலின் 2022 டிசம்பர் மாத இறுதியில் வெளியிட்டார். பின்னர் செங்கரும்பு இல்லாமல் பொங்கல் இனிக்காது என்று பொதுமக்களும் அத்தனை அரசியல் கட்சிகளும் ஒரு சேர குரல் கொடுத்ததால் ஆறடி உயர கரும்பும் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. அதன் பிறகு 2023 ஜனவரி 4ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் 1000 ரூபாய் வழங்கப்பட்டது.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், திமுக அரசு திடீரென பொங்கல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் எப்படி எழுந்தது என்றுதான் தெரியவில்லை. பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கூட தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “பொங்கலுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்களா?… ரேசன் கார்டுக்கு 5000 ரூபாயா?…என்ற கேள்வியை எழுப்பி அதை முதலமைச்சரின் எக்ஸ் பக்கத்திற்கு டேக் செய்தும் இருக்கிறார்.
இந்த நிலையில்தான் திமுக எம்பி கனிமொழி 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது “கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பின்றி தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 2500 ரூபாயை பொங்கல் பரிசுத் தொகையாக அதிமுக அரசு அறிவித்திருப்பது போதுமானது அல்ல. அதை ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக அரசை வலியுறுத்தி வருகிறார்” என்று குறிப்பிட்டதை சமூக ஊடகங்களில் கடந்த இரண்டு நாட்களாக பலரும் வைரல்
ஆக்கி வருகின்றனர்.
அதேபோல 2020 டிசம்பர் 22ம் தேதி, கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியும் “தமிழக அரசு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் அறிவித்துள்ளது. இதை கொடுக்கச் சொன்னதே நாங்கள்தான். கொரோனா காலத்தில் இருந்தே ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கவேண்டும் என்று தலைவர் ஸ்டாலின் தெரிவித்து வந்தார். ஆனால், அப்போது நிதி இல்லை என்று சொல்லி விட்டு, இப்போது தேர்தல் நெருங்குவதால் 2500 ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளனர். கொடுங்கள், இதை நாங்கள் சொன்னது போன்று 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுக்க வேண்டும் என்பதைத்தான் இப்போதும் சொல்கிறோம்” என்று கூறியதையும் வலைத்தளவாசிகள் தோண்டி எடுத்து அதை வேகமாக பரப்பியும் வருகிறார்கள்.
எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்காக, திமுக அரசு பரிசுத்தொகை எவ்வளவு என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப் பூர்வ அறிவிப்பையும் வெளியிடாததால் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்ற கேள்வியும் இருக்கிறது.
ஏனென்றால் 2020-ம் ஆண்டு தமிழகத்தில் கொரோனா பெரிய அளவில் வேலைவாய்ப்பை இழக்கச் செய்ததால் அதை ஈடு கட்டும் விதமாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும், தலா ஐந்தாயிரம் ரூபாயை அதிமுக அரசு வழங்க வேண்டும். ஏனென்றால் 2500 ரூபாய் என்பதெல்லாம் மக்களின் வாழ்வாதார இழப்பை ஈடுகட்ட ஒருபோதும் உதவாது என்று அப்போது உதயநிதியும் கனிமொழி எம்பியும் வலியுறுத்தினர்.
உதயநிதியோ எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே போய் நாங்கள் சொன்னதால்தான் 2500 ரூபாயை எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார் என்ற விமர்சனத்தையும் காட்டமாக வைத்தார்.
2020ல் தமிழகத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்திற்கு இணையாக 2023ம் ஆண்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சை, நாகைப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை கோவை ஆகிய 15 மாவட்டங்களை மழை வெள்ளம் ஒரு வழி பண்ணி விட்டது. அதேபோல திமுக ஆட்சிக்கு வந்த பின்பு அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் இரட்டிப்பாகிவிட்டது, வேலைவாய்ப்பும் எதிர் பார்த்த அளவிற்கு பெருகவில்லை, கிராம மக்களின் வாழ்வாதாரமும் முன்னேற்றம் கண்டதாக தெரியவில்லை, சிறு மற்றும் குறு தொழில்கள் அடியோடு முடங்கிப் போய் விட்டன என்ற கடுமையான விமர்சனங்கள் பல்வேறு தரப்பிலும் வைக்கப்படுகிறது.
எனவே திமுக அரசு, தமிழக மக்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாட அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்போர் அனைவருக்கும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவதில் எந்த தவறும் இல்லை என்பதும் அவர்களின் வாதமாக உள்ளது.
“ஆனால் திமுக அரசு பொங்கல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேற வாய்ப்பே இல்லை என்பதுதான் எதார்த்தம்”என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
“ஏனென்றால் கடந்த டிசம்பர் மாதம் எட்டு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்காக திமுக அரசு இதுவரை 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிவாரண உதவித்தொகை வழங்கியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
அதேநேரம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களின் பல கிராமங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தது போல வெள்ள நிவாரணம் ஆறாயிரம் ரூபாய் வழங்காமல் வெறும் ஆயிரம் ரூபாயை மட்டும் கொடுத்து ஏமாற்றுவதாக வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் போராட்டம் நடத்தி வரும் வீடியோ காட்சிகளையும் சமூக ஊடகங்களில் காண முடிகிறது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் துண்டிக்கப்பட்ட சாலைகளை மீண்டும் முழுமையாக ஏற்படுத்திக் கொடுக்கவே இன்னும் 500 கோடி ரூபாய் வரை தேவைப்படும் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
என்றபோதிலும் 2021 பொங்கல் பண்டிகையின்போது அதிமுக அரசு வழங்கிய 2500 ரூபாயை இரு மடங்காக அதிகரித்து தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. ஒருவேளை நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம் என்று கருதுவதால் ஒரு ஓட்டுக்கு கிடைக்கக்கூடிய தொகையாக ஐந்தாயிரம் ரூபாயை தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்களோ, என்னவோ தெரியவில்லை.
இதற்காக மக்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. ஏனென்றால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், 75 சதவீத வாக்காளர்கள் பண மழையில் நனைந்தனர். ஒவ்வொரு ஓட்டுக்கும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை திமுகவினர் வாரி வழங்கியதாக குற்றச்சாட்டும் கூறப்பட்டது. அதனால் தங்கள் தொகுதியிலும் இடைத்தேர்தல் ஏதும் வராதா என்று வாக்காளர்கள் ஏங்கும் விபரீத நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதும் உண்மை.
எனவே நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆளும் கட்சியான திமுக ஓட்டுக்கு கொடுக்கும் பணத்தை பொங்கல் பரிசாக தந்துவிடும் என்ற எண்ணம் வாக்காளர்களிடம் தானாகவே வந்துவிட்டது. அதனால்தான் ஐந்தாயிரம் ரூபாயை அவர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் போல் தெரிகிறது.
ஆனால் அரிசி ரேஷன் கார்டு வைத்திருக்கும் 2 கோடி பேருக்கும்
தலா 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றால் பத்தாயிரம் கோடி ரூபாய் ஸ்டாலின் அரசுக்கு தேவைப்படும். ஏற்கனவே சாதாரண நகர்ப்புற டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதற்காக ஆண்டுக்கு 3000 கோடி ரூபாயை தமிழக அரசு இழந்து வருகிறது. இது தவிர மகளிர் உரிமைத் தொகைக்காக ஆண்டுக்கு
13 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படுகிறது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் திமுக அரசு 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியும் இருக்கிறது. இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் பொங்கல் பரிசு தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவுதான்.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய் கிடைத்தாலே அது பெரிய விஷயமாக இருக்கும்.
இந்நிலையில் பொங்கல் பரிசை ஆயிரம் ரூபாயிலிருந்து 2 ஆயிரமாக அதிகரித்துக் கொடுத்தால் தான் நாடாளுமன்றத் தேர்தலை நம்மால் எளிதில் சந்தித்து வெற்றி பெற முடியும் என்று முதலமைச்சர் ஸ்டாலினை அமைச்சர்களில் சிலர் வலியுறுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
என்ற போதிலும் முந்தைய அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உதயநிதியும், கனிமொழியும் வலியுறுத்தியதால், இப்போது தமிழகத்தில் உங்கள் ஆட்சிதானே நடக்கிறது நீங்கள் அன்று சொன்னபடி இன்று ஏன் கொடுக்கக் கூடாது என்று ரிப்பீட் கேள்வியாக எழுந்திருக்கிறது என்பதுதான் உண்மை” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
பொங்கல் பரிசாக எவ்வளவு அறிவிக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
====