பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி முறைகேடு… நீதிமன்றத்தில் வழக்கு போட்ட அதிமுக : திமுக அரசுக்கு புதிய நெருக்கடி..!!
Author: Babu Lakshmanan24 January 2022, 7:24 pm
சென்னை : பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ,500 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக புதிய வழக்கு ஒன்றை போட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதில், புளியில் பல்லி இருந்ததாகவும், ரவை உள்ளிட்டவற்றில் பூச்சியும், மிளகுக்கு பதிலாக இளவம்பஞ்சுக் கொட்டையும், மிளகாய்த்தூளுக்கு பதிலாக மரத்தூளும் கொடுக்கப்பட்டதாக பொதுமக்கள் அடுத்தடுத்து புகார் தெரிவித்தனர். மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பை சாலையில் கொட்டி மக்கள் போராட்டமும் நடத்தினர்.
தரமற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாகவும், ரூ.500 கோடி முறைகேடு நடந்திருப்பதாகவும் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல, கரும்பு விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்ததில் விதிமீறல்கள் நடந்ததாகவும் புகார் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதல் செய்ததில் ரூ,500 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக புதிய வழக்கு தொடர்ந்துள்ளது. வெளிமாநிலத்தவருக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கரும்பு விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்துவிட்டு 50% ரொக்கம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக பிரமுகர் இன்பதுரை புகார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.
திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து வெறும் 8 மாதங்களே ஆகியுள்ள நிலையில் எழுந்த முறைகேடு புகார் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.