திருக்கோவிலூரில் இடைத்தேர்தல்….? வரிந்து கட்டும் அதிமுக, பாஜக..!திமுகவுக்கு திடீர் அக்னி பரீட்சை!

Author: Babu Lakshmanan
21 December 2023, 8:12 pm

வருமானத்துக்கு அதிகமாக அதிகமாக 1 கோடியே 72 லட்ச ரூபாய் அளவுக்கு சொத்து குவித்த வழக்கில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடிக்கும், அவருடைய மனைவி விசாலாட்சிக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இருவருக்கும் தலா 50 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கில் இரு தினங்களுக்கு முன்பு, பொன் முடியும் அவருடைய மனைவியும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தற்போது இருவருக்கும் சிறைத் தண்டனையை உறுதி செய்துள்ளது. மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் கூறியும் இருக்கிறார்.

இத்தீர்ப்பின் மூலம் திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக பதவி வகித்த யாருமே சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி சிறைத் தண்டனை பெற்றதில்லை என்று திமுகவினர்
இதுவரை பெருமையோடு கூறி வந்ததற்கு பெரிய முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு பற்றிய சுருக்கமான விவரம்.

பொன்முடி கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி, கனிமவளத் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 72 லட்ச ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி இருவருக்கும் எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 2011-ம் ஆண்டுஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. பின்னர், விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு கடந்த 2015-ம் ஆண்டு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரமூர்த்தி, இந்த வழக்கில் பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்து கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பு அளித்தார்.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 2017-ம் ஆண்டு மேல்முறையீடு செய்தது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு விசாரணை, இறுதியாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நடந்து வந்தது.

நிறைவாக, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த 19-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் “விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் இந்தவழக்கை மேலோட்டமாக விசாரித்து இருக்கிறது. வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 72 லட்ச ரூபாய் அதாவது 64.9 சதவீத அளவுக்கு அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் சொத்து குவித்துள்ளதாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபணம் ஆகி உள்ளது.

ஆனால், அவர்களது வருமானத்தை தனித்தனியாக பிரித்துப் பார்த்து, வருமான வரி கணக்கு அடிப்படையில் இருவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது அடிப்படையிலேயே தவறு. அந்த தீர்ப்பை ரத்து செய்கிறேன்.

பொது ஊழியரான அமைச்சர் பொன்முடிக்கு, கணக்கில் காட்டப்படாத வகையில் வந்த வருமானம் மூலம் அவரது மனைவி விசாலாட்சி பல்வேறு சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். இந்த மூலதன வருமானத்தை சிறப்பு நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, இந்த வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என்பதால் தண்டனை விவரங்கள் டிசம்பர் 21ம் தேதி அறிவிக்கப்படும்” என்று கூறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து இன்று காலை 10.30 மணி அளவில் பொன் முடியும், அவருடைய மனைவி விசாலாட்சியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக ஆஜராகி இருந்த நிலையில் தண்டனை விவரத்தை நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்தார்.
இது திமுகவினரை பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஏனென்றால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 8 ன் கீழ் உட்பகுதி 1-ன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி உடனடியாக தகுதி இழப்புக்கு உள்ளாக நேரிடும்.

குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட எம்பி, எம்எல்ஏக்களை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

அதுபோல, இந்த வழக்கில் சிறை தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டாலும், அதன்பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலிலும் போட்டியிட முடியாது. தற்போது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் பொன்முடி குற்றவாளி என உயர் நீதிமன்றம் அறிவித்து 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து இருப்பதால் அவர் தனது எம்எல்ஏ, அமைச்சர் பதவியை உடனடியாக இழக்கும் நிலையும் ஏற்பட்டுவிட்டது.

“பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை, அபராதம் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால் இந்த வழக்கில் அவர் மேல் முறையீட்டுக்கு சென்றாலும் கூட சாதகமாக தீர்ப்பு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்றே கருதத் தோன்றுகிறது” என்று அரசியல் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, தற்போது தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டு விட்டதால், பொன்முடி திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ பதவியை இழந்து விட்டதாகவே அர்த்தம். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து குற்றவாளி என்ற தீர்ப்புக்கு தடை பெற்றால் மட்டுமே அவரால் பதவியில் தொடர முடியும். அதுவரை அவர் பதவியில் நீடிக்க முடியாது.

ஆனால் மேல்முறையீட்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்குகளில் அரசியல் கட்சிகளின் குற்றவாளிகள் யாருக்கும் இதுவரை பெரிய அளவில் தண்டனை குறைப்பு செய்யப்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. ஒருவேளை இதில் பொன்முடி தப்பினாலும் கூட இதேபோன்ற இன்னொரு வழக்கில் அவருடைய தலைக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டு இருக்கிறது. கடந்த 1996 முதல் 2001ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 36 லட்ச ரூபாய் அளவிற்கு சொத்து குவித்ததாக அவருக்கும், அவருடைய மனைவி விசாலாட்சிக்கும் எதிராக 2002-ல் அதிமுக ஆட்சியில் ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு அவசர அவசரமாக வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதில் இருவரையும் அந்த நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் விடுதலை செய்தது. இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் விதமாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தும் வருகிறது. நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நிலுவையில் உள்ள இந்த வழக்கின் மீது இன்னும் ஓரிரு மாதங்களில் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பொன்முடியை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்த உத்தரவையே சென்னை உயர் நீதிமன்ற ரத்து செய்து தண்டனை வழங்கியுள்ள நிலையில் இரண்டாவது வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வருமா? என்பது சந்தேகம்தான்” என்று அந்த அரசியல் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் கூட குற்றவாளி என்பதற்கு எந்த தடையும் இல்லாததால், பொன்முடியின் அமைச்சர் பதவியும், எம்எல்ஏ பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோன நிலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, பொன்முடி கவனித்து வந்த உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது குறித்து ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அவர் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்தும் இருக்கிறார்.

இந்த நிலையில்தான் பொன்முடி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்கு 2024 நாடாளுமன்றத்தேர்தல் நடக்கும் போது இடைத்தேர்தலும் நடத்தப்படலாம் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் 2016, 2021 தேர்தல்களில் பொன்முடி வெற்றி பெற்றிருக்கிறார்.

கடந்த தேர்தலில் திமுக வேட்பாளரான அவருக்கு சுமார் ஒரு லட்சத்து 11 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்துள்ளது. அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாஜக
51 ஆயிரமும், தேமுதிக14 ஆயிரமும், நாம் தமிழர் கட்சி 11 ஆயிரம் ஓட்டுகளும் பெற்றுள்ளன.

இதே தொகுதியில் 2016 நடந்த தேர்தலில் பொன்முடிக்கு 93 ஆயிரம் ஓட்டுகளும், அப்போது தனித்துப் போட்டியிட்ட அதிமுகவுக்கு 52 ஆயிரமும், பாமகவுக்கு 18 ஆயிரமும், பாஜகவுக்கு ஆயிரத்து 100 வாக்குகளும் கிடைத்துள்ளது.

அதனால் இம்முறை யார் யார் எந்த கூட்டணியில் சேருகிறார்கள் என்பதை பொறுத்து
திமுகவுக்கு கடுமையான போட்டியை கொடுக்கப் போவது அதிமுகவா?…பாஜகவா? என்ற கேள்வி எழும். அதேநேரம் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த இடைத் தேர்தலின்போது திமுக அமைச்சர்கள் 20 பேர், முகாமிட்டு வாக்காளர்களை சிறப்பாக கவனித்துக் கொண்டது போல் திருக்கோவிலூரில் நடக்க வாய்ப்பே இல்லை.

ஏனென்றால் இந்த இடைத்தேர்தல் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து நடத்தப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் தென்படுகிறது. இது அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் தங்களது வலிமையை வெளிப்படுத்தும் நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதேநேரம் ஆளும் கட்சியான திமுகவுக்கு திருக்கோவிலூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் அது ஒரு அக்னி பரீட்சையாகவே அமையும்.
ஏனென்றால் தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏ ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிறை தண்டனை பெற்றவர் என்ற நிலையில் தேர்தலை சந்திக்கும் சூழலுக்கு திமுக தள்ளப்படுவதுதான், இதற்கு முக்கிய காரணம்.

  • SOORI THUG LIFE திருச்செந்தூரில் சூரிக்கு பிறந்த ஞானோதயம்.. Thug life of the day
  • Views: - 385

    0

    0