நீதிபதியிடம் கைக்கூப்பி கோரிக்கை விடுத்த பொன்முடி… நீதிமன்ற அறையில் நடந்த சம்பவம் ; திமுகவுக்கு அடி மேல் அடி…!!

Author: Babu Lakshmanan
21 December 2023, 11:50 am

சொத்து குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்குமாறு நீதிபதி ஜெயச்சந்திரனிடம் பொன்முடி கைக்கூப்பி கோரிக்கை விடுத்தார்.

கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத் துறை, 2002ல் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டாலும், முறையான விசாரணை நடைபெறவில்லை எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றம் தானாக இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தது. பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு, அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்தது செல்லாது என்றும், அவர் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.

தண்டனை விபரங்கள் வெளியிடப்படும் என்பதால், தேசியக்கொடி அகற்றப்பட்ட காரில் அமைச்சர் பொன்முடி தனது மனைவி விசாலாட்சியுடன் சென்னை உயர்நீதிமன்றம் வந்தார். இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணைக்கு வந்த போது, தண்டனை வழங்கும் போது, பொன்முடியின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை கணக்கில் கொள்ள வேண்டும் என்றும், ஆகவே குறைந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும், தண்டனையுடன் தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைப்பதாகவும், கூடுதல் அவகாசம் தேவைப்பட்டால் 30 நாட்களுக்கு பிறகு நீதிமன்றத்தை நாடலாம் என்று தெரிவித்தார்.

இதனிடையே, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்குமாறு நீதிபதி ஜெயச்சந்திரனிடம் பொன்முடி கைக்கூப்பி கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டின் போது தண்டனையை குறைக்குமாறு கோரிக்கை வைக்கலாம் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார். மேலும், தீர்ப்பின் நகலை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அவர் ஆணையிட்டார்.

அதேவேளையில், சிறை தண்டனை பெறும் எம்பி, எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)ன் படி, 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை பொன்முடி இழந்தார். இதன்மூலம் திருக்கோவிலூர் காலியான தொகுதியாக மாறியுள்ளது. எனவே, அடுத்த 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டியது அவசியமாகும். அநேகமாக, அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத் தேர்தலும் நடத்தப்படும் என தெரிகிறது.

இதனிடையே, உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கிலும் பொன்முடிக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டு விட்டால், தண்டனை காலம் முடிந்த பிறகு, அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. இது திமுகவுக்கு பெருத்த அடியாக அமைந்துள்ளது. ஏற்கனவே, அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மற்றொரு அமைச்சருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது திமுகவினரை மேலும் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 414

    0

    0