பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை.. உச்சநீதிமன்றத்தில் செய்த அப்பீல் : விசாரணைக்கு தயார்.. திக் திக்!!!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2024, 2:22 pm

பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை.. உச்சநீதிமன்றத்தில் செய்த அப்பீல் : விசாரணைக்கு தயார்.. திக் திக்!!!

தமிழ்நாட்டில் 2006 – 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ1.75 கோடி சொத்துக்கள் சேர்த்ததாக பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி மீது 2011-ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி தீர்ப்பளித்தார்.

இதனைத் தொடர்ந்து பொன்முடி, மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த டிசம்பர் 21-ந் தேதி தண்டனை விவரங்களை அறிவித்தார். மக்கள் பிரநிதிதித்துவ சட்டத்தின் படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் தகுதி நீக்கம் செய்யப்படுவர். இதனடிப்படையில் பொன்முடி எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். அவருக்கு பதில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் இலாகா கூடுதல் பொறுப்பாக அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பொன்முடி, மனைவி விசாலாட்சிக்கான 3 ஆண்டு சிறை தண்டனையை 30 நாட்களுக்கும் நீதிபதி ஜெயச்சந்திரன் நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார். மேல்முறையீடு செய்ய ஏதுவாக இந்த கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் 3 ஆண்டுச் சிறை தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீது வரும் வெள்ளிக்கிழமையன்று உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.

பொன்முடி மீது மற்றொரு சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டிருந்தது. அந்த வழக்கில் பொன்முடியை வேலூர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் எம்பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?