இது சரியல்ல… கட்டிடம் பழுதடைந்தது மருத்துவர்களின் தப்பா…? பணியிட மாற்ற செய்ததை ரத்து செய்க.. கொந்தளிக்கும் அன்புமணி ராமதாஸ்..!!

Author: Babu Lakshmanan
6 October 2022, 5:13 pm

வேலூர் – பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்ததற்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குரல் கொடுத்துள்ளார்.

அண்மையில் வேலூர் மாவட்டம் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மருந்துகளை உரிய இருப்பு வைக்காத காரணத்தாலும், பணியை முறையாக செய்யாத காரணத்தாலும், இரு மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், பணியிட மாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு ஆதரவாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடி மருந்து இல்லை, எக்ஸ்-ரே கருவி பழுது, கட்டிடம் பாழடைந்துள்ளது என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த இரு மருத்துவர்களை மருத்துவ அமைச்சர் பணியிட மாற்றம் செய்திருக்கிறார். இது ஏற்க முடியாதது ஆகும்!

தமிழகத்தில் பெரும்பான்மையான மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட குறைகள் உள்ளன. பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான பாம்புக்கடி மருந்து அரசிடமிருந்து வரவில்லை என்று மருத்துவர்கள் அமைச்சரிடம் விளக்கம் அளிக்கின்றனர். இதில் மருத்துவர்களின் தவறு எதுவும் இல்லை.

அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடின்றி மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் முதன்மைப் பணி. தேவையான மருந்துகளை கோருவதை தவிர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாது. இதற்காக அவர்களை தண்டிப்பது அநீதி!

மருத்துவமனை கட்டிடம் பாழடைந்திருப்பதற்காக மருத்துவர்களை இடமாற்றம் செய்வது தமிழக வரலாற்றில் இதுவரை நடக்காதது. தமிழக அரசு மருத்துவர்களின் சேவையும், பொறுப்புணர்வும் பலமுறை நிரூபிக்கப்பட்டவை. எனவே, அரசு மருத்துவர்கள் செய்யாத தவறுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…