தள்ளிப்போன இடைத்தேர்தல்?… திமுகவின் ‘கேம் பிளான்’ அவுட்!
Author: Udayachandran RadhaKrishnan10 May 2024, 9:15 pm
தள்ளிப்போன இடைத்தேர்தல்?… திமுகவின் ‘கேம் பிளான்’ அவுட்!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்னும் சில மாதங்கள் தள்ளிப் போகலாம் என்ற தகவல் யாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோ, இல்லையோ திமுக தலைமையை சற்று பதற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
ஏனென்றால் அந்த தொகுதியின் திமுக எம்எல்ஏவான 71 வயது புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி திடீரென மரணம் அடைந்ததால் உடனடியாக தமிழக தேர்தல் ஆணையம் விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டது. அதே நாளில் அதை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவிக்கவும் செய்தார்.
இதற்கு முக்கிய காரணம் ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்டம் ஜூன் 1ஆம் தேதி நடக்க இருப்பதால் அன்றைய தினமே விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இருந்ததுதான். இதனால் மே ஏழாம் தேதி அன்று தேர்தல் நடப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எகிறியது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
மேலும் படிக்க: ஒன்றரை மாத சிறை வாசம்.. வெளியே வந்த கெஜ்ரிவால் ; தொண்டர்களை பார்த்ததும் சொன்ன அந்த வார்த்தை!
அதேநேரம் ஏழாம் கட்ட தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு வேட்பு மனு தாக்கல் நடந்து வருவதால் விக்கிரவாண்டி சட்டப் பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின்புதான் நடத்தப்படும் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது.
மேலும் விழுப்புரத்தை சொந்த மாவட்டமாக கொண்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் “தமிழகத்தில் வெப்ப அலை வீசுவதால் ஜூன் 1ம் தேதி விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலை நடத்தவேண்டாம். வாக்காளர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாவார்கள்” என்று தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தும் இருந்தார். அவருடைய இந்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது போலவே தோன்றுகிறது.
இத்தொகுதியில் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் தமிழகத்தில் அப்போது வடகிழக்கு பருவ மழைக்காலம் என்பதால் அதற்கு ஓரிரு மாதங்கள் முன்கூட்டியே அதாவது ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.
திமுகவைப் பொறுத்தவரை ஜூன் 1ம் தேதியே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நடத்தி முடிக்க விரும்பியது. அதனால்தான் புகழேந்தி இறந்த அடுத்த இரண்டு நாட்களிலேயே தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சட்டப் பேரவை செயலகம் தகவலும் தெரிவித்தது.
திமுக ஆட்சி காலத்தில் எந்தவொரு தொகுதியிலும் இப்படி இடைத்தேர்தலை நடத்துவதற்கு மின்னல் வேகம் காட்டியதில்லை என்று கூறப்படுகிறது. இதுதான் தமிழக அரசியல் வட்டாரத்திலும் தற்போது பெரும் பேசு பொருளாகவும் உருவெடுத்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழுமையான வெற்றி கிடைக்காது, அதிகபட்சம் 29 தொகுதிகளைத்தான் கைப்பற்ற
முடியும். எஞ்சிய பத்து தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு ஆறு இடங்களிலும், பாஜக கூட்டணிக்கு நான்கு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக பல்வேறு சர்வேக்களும் கூறும் நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தள்ளிப் போவதால் அறிவாலயம் சற்று அதிர்ந்துதான் போயிருக்கிறது, என்கிறார்கள்.
“இதற்கான காரணங்கள் வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான்” என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
“ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தலோடு விக்கிரவாண்டிக்கும் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு இருந்தால் அந்தத் தொகுதியில் திமுக மீது மக்களுக்கு ஏற்படும் அனுதாபம் காரணமாக எளிதில் வெற்றி பெற்று விட முடியும் என்ற நிலை இருந்தது. மறைந்த புகழேந்தியின் குடும்பத்திலிருந்து யாராவது ஒருவரை நிறுத்தினால் வெற்றி நிச்சயம் என்றும் திமுக கருதியது. தவிர இடைத்தேர்தலுக்காக அதிகமாக பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படாது.
ஆனால் இரண்டு மூன்று மாதங்கள் கடந்து தேர்தல் நடத்தப்பட்டால் அனுதாப அலையின் வீரியம் வெகுவாக குறைந்து விடும், என்பதுதான் எதார்த்தம்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் தேதி திடீரென மரணம் அடைந்தார். இதனால் காலியான அந்தத் தொகுதியில் 53 நாட்களுக்கு பிறகு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
அந்தத் தேர்தலில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈ வி கே எஸ் இளங்கோவன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை தேர்தல் களத்தில் இறக்கி விட்டவர் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் காங்கிரஸ் வேட்பாளராக ஈ வி கே எஸ் இளங்கோவனைத்தான் நிறுத்தவேண்டும் என்று பரிந்துரை செய்தவர் ஸ்டாலின்தான்.
என்றாலும் கூட அந்தத் தேர்தலில் திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலாவை மிஞ்சும் அளவிற்கு பட்டி ஃபார்முலா என்னும் புதிய ஃபார்முலாவை திமுக கையில் எடுத்தது. எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட ஏழ்மை மற்றும் விளிம்பு நிலையில் உள்ள 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்களை 125க்கும் மேற்பட்ட தேர்தல் பணிமனைகளில் அடைத்து வைத்தும், சுற்றுவட்டப் பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றும் எதிர்க்கட்சிகளை பிரச்சாரம் செய்ய முடியாத அளவிற்கு இந்த பார்முலாவை திமுக கையாண்டதாக கூறப்பட்டது. இது தவிர கட்சி பணிமனைகளில் இருந்தவர்களுக்கு அவர்களின் வீடுகளில் உள்ள ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் தினமும் 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை சிறப்பு கவனிப்பும் நடந்தது என்பார்கள்.
அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி இந்தப் பட்டி ஃபார்முலாவை கையில் எடுத்து ஈ வி கே எஸ் இளங்கோவனை 66 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒரேயொரு தொகுதி இடைத்தேர்தலுக்காக மட்டுமே 300 கோடி ரூபாய்க்கு மேல் திமுக செலவிட்டது என கூறப்படுவதும் உண்டு.
இப்போது விக்கிரவாண்டியில் தேர்தல் தள்ளி போவதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலைமைக்கு திமுக தள்ளப்பட்டு இருக்கிறது.
விக்கிரவாண்டி தொகுதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. அது, அமைச்சர் பொன்முடியின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் மாவட்டம் ஆகும். இதனால் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க அவர் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வார் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம். குறிப்பாக தேர்தலுக்கு ஆகும் செலவு, வாக்காளர்களை கவனித்துக் கொள்வது போன்றவற்றை பொன்முடியும் இந்த மாவட்டத்தில் உள்ள இன்னொரு அமைச்சரான செஞ்சி மஸ்தானும் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
இதையெல்லாம் கணக்கு போட்டு பார்த்துதான் திமுக தலைமை விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலை ஜூன் 1ம் தேதி அன்று நடத்தி முடிக்க விரும்பியது.
பெரும்பாலான நேரங்களில் இடைத்தேர்தலில் வெற்றி என்பது ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே அமையும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
என்றபோதிலும் திமுக ஏன் ஜூன் முதல் நாளே தேர்தலை நடத்த விரும்பியது என்பதற்கு மேலும் இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. திமுக கூட்டணியின் உண்மையான பலம் என்ன என்பது இந்த இடைத்தேர்தலில் தெரிந்துவிடும்.
அதை அடிப்படையாகக் கொண்டே 2026 தமிழக தேர்தலுக்கான காய்களை திமுக நகர்த்தும் என்பதை உறுதியாக சொல்லலாம்.
ஏன் விளவங்கோடு தொகுதியிலும் இடைத்தேர்தல்தானே நடந்தது, அதை திமுக கூட்டணி கணக்கில் எடுத்துக் கொள்ளாதா? என்ற கேள்வி எழுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் அந்த தொகுதியைப் பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக போன்றவைதான் பிரதான கட்சிகள். அதனால் விக்கிரவாண்டி தொகுதியுடன் அதைப் பொருத்திப் பார்ப்பது அவ்வளவு உசிதமானது அல்ல.
இதில் திமுகவை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இருப்பதால் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் விழுப்புரத்தில் போட்டியிட்ட விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் வாங்கும் வாக்குகளை விட விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஓட்டுகள் கூடுதலாக கிடைத்தால் அது விமர்சனத்திற்கு உள்ளாகலாம். ஏனென்றால் விசிகவுக்கு திமுகவினர் வாக்களிக்காமல் விட்டுவிட்டதால்தான் எங்களுக்கு ஓட்டுகள் குறைந்து போய்விட்டது என்று திருமாவளவன் மனதுக்குள் புலம்பும் நிலையும் ஏற்படும்.
அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் ஃபார்முலாவை திமுக விக்கிரவாண்டியிலும் பயன்படுத்தி மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்று விமர்சனங்களை வைக்கும் என்பதும் நிச்சயம்.
மேலும் வடக்கு மண்டலத்தில் தங்கள் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மூலம் திமுக உறுதிப்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டு இருந்தது.
இதனால் அங்கு தேர்தலை ஜூன் 1ம் தேதியே நடத்தி முடித்து விட வேண்டும் என்று திமுக தலைமை போட்ட மெகா பிளான் வொர்க் அவுட் ஆகவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
எது எப்படியோ, விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் தள்ளிப் போவதால் வாக்காளர்கள் சிறப்பு கவனிப்புக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும்!