நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும்போது மின்வெட்டு… மின்வாரிய 2 உதவி பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்து அதிரடி..!!
Author: Babu Lakshmanan13 September 2022, 6:23 pm
வேலூர் ; அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மின்வாரிய 2 உதவி பொறியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ மின்வாரிய அலுவலகத்தை தொடர்புகொண்டும் மின் இணைப்பு வராததால் அதிருப்தி அடைந்த அமைச்சர் துரைமுருகன் விழாவை விரைந்து முடித்துக்கொண்டு புறப்பட்டு சென்றார்.
இதனையடுத்து, இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு காட்பாடி, தாராப்படவேடு ஆகிய பகுதி துணை மின் நிலைய உதவி பொறியாளர்கள் கிரண்குமார், சிட்டிபாபு ஆகிய 2 பேரை காட்பாடி வடுங்கன்தாங்கள் துணை மின் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து வேலூர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் பேசும் போது மின்வெட்டு ஏற்பட்டதால், அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.