இபிஎஸ்-ஐ குறைத்து மதிப்பிடக் கூடாது.. மீறினால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் ; எச்சரிக்கும் பிரசாந்த் கிஷோர்..!!

Author: Babu Lakshmanan
21 February 2024, 4:30 pm

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாட்டை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று பிரபல தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரும் மார்ச் 9ம் தேதி வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஏப்ரல் மாதத்தின் 2வது வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணி, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என்று 4 முனை போட்டி நிலவும் என்று தெரிகிறது. கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக மற்றும் பாஜக இந்த முறை தனித்தனியே கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலை சந்திக்க இருக்கின்றன. திராவிட அரசியலுக்கு மாற்றாக பாஜகவை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். அதேவேளையில், தமிழகத்தில் அதிமுகவின் பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற முனைப்பில் இபிஎஸ் பணியாற்றி வருகிறார்.

இப்படியிருக்கையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் மத்தியில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று, 3வது முறையாக பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக அதிக இடங்களை பிடிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோரின் தற்போதைய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை அதிமுகவினர் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரசாந்த் கிஷோரிடம், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த தேர்தலை சந்தித்த அதிமுக, மீண்டு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதா..? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர், தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆற்றலை மிகக் குறைவாக எடுத்துக் கொள்ள மாட்டேன். யாராவது அப்படி அவரை குறைத்து மதிப்பிட்டால், அது அவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறாகும், எனக் கூறியுள்ளார்.

அவரது இந்தப் பேச்சின் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, திமுகவுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் என்ற அர்த்தத்தில் கூறியுள்ளார். எனவே, அவரது இந்தக் கணிப்பை அதிமுகவினர் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…