காங்கிரஸை அழிக்க பிரசாந்த் கிஷோர் திட்டம்…? சோனியாவின் முடிவை எதிர்த்து கருப்புக் கொடி போராட்டம்… தமிழகத்தில் கிளம்பிய எதிர்ப்பு..!!
Author: Babu Lakshmanan26 April 2022, 3:55 pm
காங்கிரஸ் கட்சியில் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சேர்க்க தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இல்லாமல் இருந்து வரும் நிலையில், டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் தோல்வியை தழுவி உள்ளது. தற்போது தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் சரிவை சந்தித்து வருகிறது.
இதை ஈடுகட்டும் வகையில், காங்கிரஸ் கட்சி மேலிட தலைமை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, அரசியல் வியூகங்களை வகுத்து வரும் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் மேலிடம் கட்சியில் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குமரி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், தமிழக காங்கிரஸ் கட்சயின் விவசாய அணியின் முன்னாள் மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “பிரசாந்த் கிஷோர் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிராக அரசியல் வியூகங்களை வகுத்து காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து உள்ளார். இதனால் காங்கிரஸ் பலவீனமடைந்து உள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சியில் அவரை இணைப்பது குறித்து மேலிட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதனால் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல்கள் ஏற்படும். மேலும் காங்கிரஸ் கட்சியை பிரசாந்த் கிஷோர் கைப்பற்றும் சூழல் உருவாகும். இதனை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாய அணி சார்பில் எதிர்க்கிறோம்,” எனக் கூறினார்.
மேலும், காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோரை இணைத்தால் தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸார் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.