‘நானும் டெல்டாக்காரன் தான்’ என நீங்க சொல்லலாமா..? அப்படி என்ன செய்தீங்க… முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரேமலதா விஜயகாந்த் கேள்வி
Author: Babu Lakshmanan16 May 2023, 1:01 pm
டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததாகவும், ஆனால் விளைநிலைத்தை திமுகவினர் வீட்டுமனையாக்கி வருகிறார்கள் என மன்னார்குடியில் தேமுதிக பொருளாளர் பிரமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் பந்தலடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:- மன்னார்குடிக்கு பெரும் பெரிய பெருமை உண்டு. ஜாதி, மதம் இல்லாத ஒரு கட்சி என்றால் அது தேமுதிக தான். லஞ்சம், ஊழலை ஒழிப்பது தான் நமது கட்சி. லஞ்சம் ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என தொடர்ந்து குரல் எழுப்பியவர் கேப்டன் ஒருவர் தான். பெண்களை பார்த்து தாய் குலங்கள் பாதிக்கப்படாத வகையில் ரேஷன் பொருட்கள் இல்லம் தேடி வரும் என சொன்னவர் கேப்டன்.
தேர்தல் வாக்குறுதிகளை இதுவரையிலும் நிறைவேற்றவில்லை. தஞ்சை – நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகளை துரிதபடுத்தவில்லை. முதல்வர் ஸ்டாலின் நானும் டெல்டா காரன் என சொல்வி வருகிறார். நீங்கள் டெல்டா மாவட்டத்திற்கு என்ன செய்தீர்கள். நீடாமங்கலம் ரயில்வே கேட்டின் நிலையினால், நாளுக்கு நாள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரையிலும் மேம்பால பணிகளை நிறைவேற்றவில்லை.
டெல்டா மாவட்டத்தில் ஆறு வாய்க்கால் தூர்வாரும் பணிகளை தொடங்கி கடைமடை வரையிலும் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்கள். ஆனால், விளைநிலைத்தை திமுகவினர் வீட்டுமனையாக்கி வருகிறார்கள். மிகவும் வேதனையாக இருக்கிறது. இதனை தொடர்ந்து, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .