பாலியல் வன்கொடுமையில் சிக்கி தவிக்கும் தமிழகம்… பெண்களுக்கு பாதுகாப்பான அரசாக செயல்பட வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த்!!!
Author: Babu Lakshmanan24 March 2022, 11:45 am
கோவை : பெண்களுக்கு பாதுகாப்பான அரசாக இந்த அரசு இருக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் தேமுதிக கட்சியின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட தேமுதிக கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் சிறப்புரையாற்றிய போது அவர் பேசியதாவது :- தமிழகத்தில் இன்று மிக முக்கியமாக பேசப்படக் கூடிய விஷயம் பாலியல் வன்கொடுமை.விருதுநகர் மற்றும் வேலூரில் மாணவிகளுக்கு மிகப்பெரிய கொடுமை நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் இது போன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எங்கு நிகழ்ந்தாலும் தேமுதிக கண்டனத்தை தெரிவிக்கும்.
ஆளும் அரசு இரும்பு கரம் கொண்டு சட்டங்களை சரிசெய்து பெண்களுக்கு பாதுகாப்பான அரசாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் தவறு செய்பவர்களுக்கு தயவு தாட்சணியம் பார்க்காமல் தண்டனை வழங்கி, இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பது ஒரு அரசின் கடமை.
மேலும் பெண்களுக்காக இந்த அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.பெட்ரோல், டீசல் விலை அத்தியாவசிய பொருட்களின் விலையை உடனடியாக கட்டுப்படுத்தி மக்களுக்கான அரசாக இந்த அரசு விளங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம். தேமுதிக என்றைக்கும் மக்களுக்காக பாடுபடும் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை(குடம், சேலை) வழங்கினார். இந்நிகழ்வில் ஒரு ஆண் குழந்தைக்கு விஜயராஜா என பெயர் சூட்டினார். இந்நிகழ்வில் தேமுதிக கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் சிங்கை சந்துரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.