குடியரசுத்தலைவர் தேர்தலில் திருமாவளவன் போட்டியா…? திமுக வகுக்கும் புதிய வியூகம்..!
Author: Babu Lakshmanan7 May 2022, 7:59 pm
குடியரசு தலைவர் தேர்தல்
தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் 25-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை இரண்டாவது வாரத்துக்குள் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த்துக்கு 76 வயது ஆவதால் பாஜக சார்பில் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லை. ஏனென்றால் 75 வயதைக் கடந்தவர்களுக்கு அரசுப் பதவிகள் வழங்கப்படமாட்டாது என்பதில் பாஜக மேலிடம் உறுதியாக உள்ளது.
நாடாளுமன்ற எம்பிக்களும் சட்டப்பேரவை எம்எல்ஏக்களும் ஓட்டு போட்டு குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதால் இத்தேர்தல் ஆளும் கட்சிக்கும், எதிர்க் கட்சிகளுக்கும் எப்போதுமே கௌரவ பிரச்சனையான ஒன்றாகும்.
வாக்குகள்
ஒரு எம்பியின் வாக்கு மதிப்பு 708. எம்எல்ஏவின் வாக்கு மதிப்பைப் பொறுத்தவரை, ஒரு மாநிலத்தின் மக்கள்தொகை மற்றும் அந்த மாநில சட்டப் பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். தமிழகத்தில் ஒரு எம்எல்ஏவின் ஓட்டு மதிப்பு 176 ஆகும். நாட்டின் ஒட்டுமொத்த எம்பிக்கள், எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 4,896.
இந்த வாக்குகளின் மொத்த மதிப்பு 10,98,903. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, நாடாளுமன்ற மக்களவையில் 326 எம்பிக்களும் மாநிலங்களவையில் 116 எம்பிக்களும் என மொத்தம் 442 எம்பிக்கள் உள்ளனர். அதாவது பாஜக 4,65,797 வாக்குகளையும் அதன் கூட்டணிக் கட்சிகள் 71,329 ஓட்டுகளையும் கொண்டுள்ளன. எனவே தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு மதிப்பு 5,37,126. இதன்படி, அக் கட்சி கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு மேலும் 9,194 ஓட்டுகள் மட்டுமே தேவை என்ற நிலை காணப்படுகிறது.
சரத்பவார்
குடியரசு தலைவர் தேர்தலை பொறுத்தவரை ஒடிசாவில் ஆளுங்கட்சியாக திகழும் பிஜு ஜனதா தளமும், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரசும் மத்திய பாஜக அரசுடன் சுமூகமான உறவையே கொண்டுள்ளன.
இதனால் பாஜக நிறுத்தும் வேட்பாளர் எவ்வித சிக்கலும் இன்றி வெற்றி பெற்று விடுவார் என்பது உறுதி. என்ற போதிலும் 18 எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து தங்களது பலத்தை காட்டுவதற்கு தயாராகி வருகின்றன.
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இப்போதே அதற்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டும் வருகின்றன.
அப்போதுதான் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒருமித்த பிரதமர் வேட்பாளரை நிறுத்துவதற்கு வழி பிறக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கருதுகிறார். முதலில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகள், அவரைத்தான் வலியுறுத்தின. காங்கிரஸ் தலைவர் சோனியாவும்,மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால், அதில் தனக்கு விருப்பமில்லை என சரத் பவார் தெளிவாக கூறிவிட்டார். பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், ஆளுங்கட்சியின் பலத்தை மீறித் தன்னால் ஜெயிக்க முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவர் மறுத்து இருக்கலாம்.
சிவசேனா
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மியை யாரும் அணுகியது போல் தெரியவில்லை. ஏனென்றால் அவருடைய கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒருவர் நிறுத்தப்படுவதை காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் விரும்பவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒன்று.
இதையடுத்து சிவசேனாவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத்துக்கு அந்த வாய்ப்பை வழங்க எதிர்க்கட்சிகள் ஆலோசித்தன. ஆனால் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அதற்கு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த தேர்தலில் தோல்வி அடைந்தாலும் கூட சிவசேனாவுக்கு தனிப்பட்ட முறையில் பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை. ஆனால் படுதோல்வி கண்டுவிட்டால் கட்சிக்கு மாநிலத்தில் உள்ள செல்வாக்கு சரிந்துபோய் விடும் என்று கருதியோ என்னவோ உத்தவ் தாக்கரே அதை நிராகரித்து விட்டார் என்கிறார்கள்.
தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், பாஜகவுக்கு எதிராக 2024 தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதில் தீவிரமாக செயல்பட்டாலும் கூட குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.
திமுக
இப்படி ஒவ்வொரு கட்சியாக கண்ணாமூச்சி ஆடி, மறுப்பு தெரிவிக்கத் தொடங்கியதால் தற்போது இந்த பந்து, தேசிய அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வரும் திமுகவை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் நாடாளுமன்றத்தில், மூன்றாவது பெரிய கட்சியாக திமுக திகழ்வதுதான். எனினும் இதுபற்றி திமுக தலைமை இதுவரை எந்த சாதகமான பதிலையும் தெரிவிக்கவில்லையாம்.
தயக்கம் காட்ட காரணம்
இதற்கும் காரணம் உண்டு என்று டெல்லியில் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
“தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உ.பி. முன்னாள் முதலமைச்சர் மாயாவதி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட ஏராளமான பெயர்கள் முதலில் உலா வந்தன. ஆனால் மாயாவதி இதை மறுத்தார். தற்போதைய நிலவரப்படி குடியரசுத் துணைத் தலைவரான வெங்கையா நாயுடுவே வேட்பாளராக நிறுத்தப்பட அதிக வாய்ப்பு தென்படுகிறது.
அப்படி அவர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், எதிர்க்கட்சிகளுக்கு அது சிம்ம சொப்பனமாகவே இருக்கும்.
அண்மையில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தலில் பாஜகவின் பலம் சற்றுக் குறைந்திருந்தாலும் கூட வெங்கையா நாயுடுவை வேட்பாளராக நிறுத்தினால், அவர் வெற்றி பெறுவதற்கான சாத்திய கூறுகளே அதிகம்.
இதனால்தான் திமுக தயக்கம் காட்டுவதாக பேச்சு அடிபடுகிறது.
திருமாவளவன்
திமுகவிலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு டி ஆர் பாலு, தயாநிதிமாறன், கனிமொழி, திருச்சி சிவா போன்ற தகுதியான தலைவர்கள் உண்டு.
எனினும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவேண்டும் என்பதில் மட்டுமே திமுக தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அப்போது எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்று விட்டால் தனது கட்சிக்கு துணைப் பிரதமர் பதவி வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் திமுகவிடம் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.
எனவே தனக்கு வந்திருக்கும் வாய்ப்பை திமுக பயன்படுத்திக் கொள்ளாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுக்கலாம். அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அல்லது பிருந்தா கரத் இருவரில் ஒருவரை குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்திட திமுக தலைமை வலியுறுத்தும் வாய்ப்பும் நிறையவே உள்ளது. இவர்கள் மறுத்தால் இன்னொரு திட்டமும் திமுகவின் கைவசம் இருக்கிறது என்கின்றனர்.
திமுக எப்போதும் பட்டியலின சமுதாய மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறி வருவதால், தற்போது கர்நாடகா போன்ற பக்கத்து மாநிலங்களுக்கு எல்லாம் சென்று தேசிய அரசியலில் அதீத ஈடுபாடு காட்டி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பாக போட்டியிட வைக்க, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் சிபாரிசு செய்வார் என்றும் ஒரு பேச்சும் உள்ளது” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த விவகாரத்தில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரசுக்கு ஆதரவாக யோசனைகளை கூறி வந்த நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு இருந்த குழப்பம், அவர் காங்கிரசில் சேராத நிலையிலும் தொடர்ந்து நீடிக்கிறது.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் என்பது முடிவுசெய்யப்பட்ட பிறகுதான், குடியரசு தேர்தலில் அக்கட்சிகள் எந்த அளவுக்குப் போட்டியைக் கொடுக்கும் என்பது தெரியவரும்!