ரூ.1க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்…பங்கில் குவிந்த வாகன ஓட்டிகள்: 500 பேருக்கு ஸ்பெஷல் ஆஃபர்…நீங்க இன்னும் கிளம்பலயா?
Author: Rajesh15 April 2022, 3:54 pm
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் வாகன ஓட்டிகளிடையே ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாதிலங்களில் பேருந்து கட்டணம் உயர்வு, ஓட்டல்களில் உணவு விலையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிராவின் சோலாப்பூர் நகரில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.1 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த பெட்ரோலை வாங்க பெட்ரோல் பங்கில் பொதுமக்கள் அதிகமான அளவில் கூடியிருந்தனர்.
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டியும் விலைவாசி உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டாக்டர் அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர் சிறுத்தைகள் அமைப்பு சிறப்பு சலுகை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. பெட்ரோல் பங்கில் ஒருவருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் மட்டுமே 1 ரூபாய்க்கு வழங்கப்பட்டது.
சுமார் 500 பேருக்கு 1 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. இருந்த போதும் பெட்ரோல் பங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரும் குவிக்கப்பட்டனர். பெட்ரோல் விலை லிட்டருக்கு 120 ரூபாயை எட்டியுள்ளது. எனவே மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளைக் கொண்டாடவும், ஒரு ரூபாய்க்கு பெட்ரோல் வழங்க முடிவு செய்ததாக அந்த அமைப்பின் மாநில பிரிவு தலைவர் மகேஷ் சர்வகோடா தெரிவித்தார்.
தினந்தோறும் பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் ஒரு ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கியதால் சிறிதளவு பணத்தை சேமிக்க முடிந்ததாக சில வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.