‘மதமாற்றம் செய்ய நீங்க எங்கும் செல்ல வேண்டாம்’… கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சாமியார் சர்ச்சை பேச்சு.. சிரித்தபடி கவனித்த CM ஸ்டாலின்!
Author: Babu Lakshmanan22 December 2022, 12:49 pm
தமிழகத்தில் திராவிட கழகம் இருப்பதால் தான் பாசிச சக்தி உள்ளே வர முடியவில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசியுள்ளார்.
சென்னை லயோலா கல்லூரியில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் ’அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அமைச்சர்கள் ரகுபதி, பொன்முடி மற்றும் அன்பில் மகேஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ்,ஜே. கருணாநிதி, ஐ-டிரீமஸ் மூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- இந்த கிறிஸ்துமஸ் விழாவை, கிறிஸ்துமஸ் விழா என்று மட்டும் சொல்லாமல் ‘அன்பின் கிறிஸ்துமஸ் விழா’ என்று இனிகோ இருதயராஜ் குறிப்பிட்டுள்ளார். எந்த விழாவாக இருந்தாலும் அது அன்பின் விழாவாக அனைவரின் விழாவாக அது அமையும். இது மதத்தின் விழாவாக இல்லாமல் ஒரு மத நம்பிக்கையாளர்கள் பங்கேற்கக்கூடிய விழாவாக இல்லாமல் அனைத்து மதத்தவரும் பங்கேற்கக்கூடிய வகையில் இந்த விழா நடக்கிறது.
சூரியனார் கோவில் மடத்தின் மகாலிங்க தேசிக பரமாச்சார்யார் சுவாமிகள் அவர்களும், ஆத்தூர் இசுலாமிய கல்விக்கூடத்தைச் சேர்ந்த முகமது இம்ரானுல்லாஹ் பாகவி அவர்களும் கலந்து கொண்டுள்ளனர். எனவே இது அன்பின் பெருவிழாவாக நடந்து கொண்டு இருக்கிறது. இதுவே சாட்சி, எனக் கூறினார்.
தொடர்ந்து, சூரியனார் கோயில் ஆதினம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பேசிய போது, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அனைவரிடமும் சிரிப்பை ஆழ்த்தியது.
அவர் பேசியதாவது :-1967ல் காந்தி தந்த அறிஞர் அண்ணா வழியில், திருவாரூர் தந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழியிலும், கோபாலபுரம் தந்த எங்கள் குமாரர் மக்கள் தளபதி மு.க.ஸ்டாலின் வழியிலும் தான் என்றென்றும் தமிழகம் செல்லும். இந்த சபையில் நீங்கள் எல்லாருமே பயப்படுகிறீர்கள். சிறுபான்மை என்று கூறினீர்கள். நாம் அனைவருமே பெரும்பான்மை தான்.
நம் எல்லாருமே இனத்தில் தமிழர்கள், மொழியில் தமிழ் பேசுகிறோம், அப்படியானால் நாம் எல்லாரும் ஒன்றுதானே. அப்போது ஏன் நாம் பயப்பட வேண்டும். எந்த பாசிச சக்தியும் நம்மை வீழ்த்த முடியாது. நான் அரசியல் பேசக்கூடாது, இருந்தாலும் வட இந்தியாவில் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா எனும் கொள்கை இருந்தது.
ஆனால் நம் கேரளத்தில் கம்யூனிஸ்டும், தமிழகத்தில் திராவிட கழகமும் இருந்ததால் அவர்களால் ஒருபோதும் உள்ளே நுழைய அனுமதி கிடைக்கவில்லை. ஓட்டுரிமை உங்கள் கையில் இருக்கும் போது ஏன் பயப்பட வேண்டும். நமக்கு தெரிந்தது இரண்டு சின்னம் தான். ஒருவர் இங்கிருக்கிறார். இன்னொன்று நான் சொல்லக்கூடாது. இவர்களோடு முதுகில் ஏறிதான் அவர்கள் பயணம் பண்ண முடியும். யாராக இருந்தாலும் எதிரி இருந்தால் தான் நாம் வளர முடியும், இல்லையெனில் நாம் வளர முடியாது.
மதமாற்றத்துக்கு நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம். உங்கள் வழிபாடுகளை சிறப்பாக செய்யுங்கள், அவர்கள் தானாகவே வருவார்கள், எனக் கூறினார். ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பேசிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பேசிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது இந்தப் பேச்சுக்கு திமுகவினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மதமாற்றத்தை ஊக்குவிப்பது போன்ற அவரது பேச்சு இருப்பதாக பல்வேறு இந்து அமைப்பினர் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.