மீண்டும் பரவும் மூளையைத் தின்னும் அமீபா; 4 வயது சிறுவன் பாதிப்பு; பொதுமக்களே உஷார்.!!
Author: Sudha26 July 2024, 2:24 pm
பிரைமரி அமீபிக் மெனிஞ்சோசெபாலிடிஸ் எனப்படும் தொற்று, மூளையை தின்னும் அமீபா எனப்படும் நெக்லேரியா பௌலேரி அமீவாவால் ஏற்படுகிறது. .
இந்த அமீபா வெப்பமான நன்னீர் ஏரிகள், ஆறுகளில் வாழக்கூடியது.உலகெங்கிலும் உள்ள ஏரி, ஆறு, நன்கு பராமரிக்கப்படாத நீச்சல் குளம் போன்ற இடங்களில் இந்த அமிபா வாழ்கிறது. இது போன்ற இடங்களில் மூழ்கிக் குளிக்கும்போது, அரிதாகச் சிலருக்கு மூக்கு வழியாக இந்த அமீபா உடலுக்குள் செல்கிறது.
”அமீபா மூக்கிலிருந்து மூளைக்கு பயணித்து, மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. பின்னர் இந்த தொற்று ஏற்பட்ட நபருக்குக் காய்ச்சல் ஏற்பட்டு மரணம் நிகழும்’’ என சொல்லப்படுகிறது.
கேரளாவில் தற்போது மூளையைத் தின்னும் அமீபா நோய் வேகமாக பரவி வருகிறது.இந்த தொற்று பாதித்த மலப்புரத்தை சேர்ந்த 5 வயது சிறுமி, கண்ணூரை சேர்ந்த 13 வயது சிறுமி, கோழிக்கோட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் ஆகிய 3 பேர் கடந்த 2 மாத காலத்தில் இறந்தது பொது மக்களிடம் பீதியை ஏற்படுத்தியது.
இந்த நோய் பாதிப்பிலிருந்து மீள்வது அரிது என சொல்லப்பட்ட நிலையில் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்த கோழிக்கோட்டை சேர்ந்த 14 வயது சிறுவன், 22 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தான்.
இந்தநிலையில் கேரளாவில் மேலும் ஒரு சிறுவன் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 20-ந்தேதி உடல் நலம் பாதித்து கண்ணூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு அமீபா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அசுத்தமான தண்ணீரில் குளிக்க வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
0
0