காவிரி நீர் விவகாரத்தில் கடமையை மறந்துவிட்டு பிரதமர் மோடி பேசுகிறார் : சீமான் தாக்கு!!
Author: Udayachandran RadhaKrishnan8 October 2023, 6:49 pm
காவிரி நீர் விவகாரத்தில் கடமையை மறந்துவிட்டு பிரதமர் மோடி பேசுகிறார் : சீமான் தாக்கு!!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தண்ணீரை திறக்கக்கூடாது என கர்நாடகாவில் போராட்டம் நடத்தப்பட்டது. அதேபோல், தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாட்டிலும் விவசாயிகள், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை திறந்து விட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள், மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். அப்போது, காவிரி நதிநீர் தமிழ்நாட்டின் உரிமை என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “சிந்து நதியில் இருந்து 80 விழுக்காடு நீரை பாகிஸ்தான் தான் ஒப்பந்த அடிப்படையில் பிரித்துக்கொள்கிறது. பிரம்மபுத்திராவில் இருந்து சீனா, வங்க தேசம், இந்தியா ஆகிய நாடுகள் எந்த சிக்கலும் இன்றி நீரை பகிர்ந்து கொள்கின்றன. ஆனால், ஒரே நாட்டில் அருகில் இருக்கும் மாநிலத்தில் இருந்து உரிய நீரை பெற முடியவில்லை.
காவிரி என்பது நமக்கு உயிர் ஆறு. காவிரி பிரச்சனையில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று தான் உரிமையை நிலைநாட்டுகிறோம். நீதிமன்றம் சென்றுதான் உரிமையை பெற முடியும் என்றால் நாடாளுமன்றமும், சட்டமன்றமும் எதற்காக இருக்கிறது? காவிரி நதிநீருக்காக ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகள் சண்டை போட்டுக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானில் பேசியுள்ளார்.
பிரதமருக்கும் காவிரி விவகாரத்திற்கும், நீர் பகிர்விற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போலவும் அது ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளுக்கான பிரச்சனை போலவும் பேசியுள்ளார் பிரதமர் மோடி. நமக்கும் அவர்தான் பிரதமர். காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பெற்றுத் தரக்கூடிய கடமையும் பொறுப்பும் அவருக்கு இருக்கிறது என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்.
குஜராத்தில் இருந்து ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்பட மற்ற மாநிலங்களுக்கு நர்மதா நதிநீரை பிரச்சனை இன்றி பகிர்ந்து கொடுப்பதாகவும் கூறும் பிரதமர் அதுபோலவே பிரச்சனை இல்லாமல் காவிரி நதிநீரை பகிர்ந்து கொடுக்க ஏற்பாடு செய்வது இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய சீமான், “காங்கிரஸும் பாஜகவும் இந்திய ஒற்றுமை பேசும். ஆனால், கர்நாடகா என்று வரும்போது மாநில கட்சியாக மாறிவிடும். தமிழர்களின் உரிமையை தேர்தலுக்காக பலியிட தயாராக இருக்கின்றனர். உரிய நீரை தமிழ்நாட்டிற்கு பகிர்ந்து கொடு என்று சொன்னால் கர்நாடகாவில் காங்கிரஸ் தோற்றுவிடும், அங்கு பாஜக சொன்னால் பாஜக தோற்றுவிடும் எனத் தெரிவித்துள்ளார்.