அதிமுகவுக்கு முக்கியத்துவம் கொடுத்த பிரதமர் மோடி… தே.ஜ. கூட்டணியின் கூட்டத்தில் இபிஎஸ்க்கு ‘மாஸ்’ பதவி!!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2023, 8:52 pm

நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில், 2-வது கூட்டம் பெங்களூரில் நேற்றும் இன்றும் என இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சிகள் முழு வீச்சில் தேர்தலுக்கு தயராகி வரும் நிலையில், பாஜகவும் வரும் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது. இதற்கான வியூகங்களை வகுத்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணி நடத்தும் அதே நாளில் போட்டிக் கூட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்தது.

தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை நீண்ட காலமாக கூட்டணியில் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, (யுபிடி) அகாலிதளம் ஆகிய கட்சிகள் வெளியேறியதால் கூட்டணியை பலப்படுத்த வேண்டிய நிலையில், உள்ளது. இதனால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் கோஷ்டியின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கூட்டணியில் புதிதாக இணைத்துள்ளது.

இந்த நிலையில், தான் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்த பாஜக இன்று அழைப்பு விடுத்தது. அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

அதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று இந்த கூட்டத்தில் 38 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதனிடையே, இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமியை ஓட்டல் வாசலுக்கே வந்து ஜேபி நட்டா வரவேற்றார். அது மட்டும் இன்றி கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பக்கத்திலேயே எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.

அதேபோல், கூட்டணி தலைவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்திலும் எடப்பாடி பழனிசாமி முதல் வரிசையில் நின்றதை காண முடிந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தென் இந்திய பிரதிநிதியாக எடப்பாடி பழனிசாமியை பிரதமர் வரவேற்றதாகவும் கூறப்படுகிறது.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 429

    0

    0