செந்தில் பாலாஜிக்கு சிக்கல் மேல் சிக்கல்?….கிடுக்குப் பிடி போட்ட சுப்ரீம் கோர்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2023, 9:37 pm

சுப்ரீம் கோர்ட் கடந்த மே மாதம் 16ம் தேதிபிறப்பித்த ஒரு உத்தரவு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தீராத தலைவலியை கொடுக்கக் கூடிய ஒன்றாகவே மாறிவிட்டது.

அதிகாலையில் கைது

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 40 பேரிடம் ஒரு கோடியே 64 லட்சம் ரூபாயை செந்தில் பாலாஜி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கை தனிப்பட்ட முறையில் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிக்கலாம். அதற்கு எந்த தடையும் கிடையாது. அதேபோல சென்னை மாநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீசும் தீவிர விசாரணை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் முடித்து எங்களுக்கு அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். இல்லாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டே சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிடும் என்று அப்போது அதிரடியாகவும் அறிவித்தது.

தங்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அதை அவர் கண்டு கொள்ளாததால் சென்னையில் உள்ள அவருடைய வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று அவரிடம் 17 மணி நேரம் தீவிர விசாரணையும் நடத்தினர். ஆனால் எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை என்பதால் அவரை ஜூன் 14ம் தேதி அதிகாலை கைதும் செய்தனர்.

அடியோடு மறந்து போன விஷயம்

பிறகு மேல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் நெஞ்சுவலியால் அவதிப்பட்டதாக கூறியதும், அதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதும் அனைவரும் அறிந்த விஷயம். தொடர்ந்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி கடந்த மாதம் 17ம் தேதி முதல் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

அவரை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தியதும் தெரிந்த விஷயம்தான்.

இது பற்றிய செய்திகள் மட்டுமே ஊடகங்களில் பரபரப்பாக வெளியாகி வரும் நிலையில் பெரும்பாலானவர்களுக்கு செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விதித்திருந்த காலக்கெடு ஜூலை 16ம் தேதியுடன் முடிந்துவிட்டது என்பதே அடியோடு மறந்து போயிருக்கும்.

இந்த நிலையில்தான் சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் 10 நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வேண்டுகோளை வைத்தனர்.

அமலாக்கத்துறை வைத்த செக்

அதில், “அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்துள்ளோம். அவர் உட்பட 178 பேருக்கு, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியதில், 58 பேர் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்தி இருக்கிறோம். இன்னும் 120 பேரிடம் விசாரணை நடத்தவேண்டி உள்ளது. செந்தில்பாலாஜி தற்போது சிறை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். உடல்நலம் தேறியவுடன் அவரிடமும் விசாரணை நடத்தப்படும். எனவே எங்களுக்கு மேலும் ஆறு மாத கால அவகாசம் அளிக்கவேண்டும்” என்று கூறியிருந்தனர்.

சுப்ரீம் கோர்ட் கொடுத்த அவகாசம் முடிந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இது தொடர்பான விசாரணை மீண்டும் நடந்தது. அப்போது சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் வேண்டுகோளை சுப்ரீம் கோர்ட் ஏற்கக் கூடாது என்று வழக்கை தொடர்ந்த மனுதாரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

“இப்படியே கால அவகாசம் கேட்டு நீடித்துக் கொண்டேபோய் இந்த வழக்கை நீர்த்துப் போக செய்வதற்காக தமிழக போலீசார் மேற்கொள்ளும் தந்திரம். எனவே இதை கோர்ட் ஏற்கக் கூடாது. இந்த வழக்கில் ஊழல் தடுப்பு சட்டத்தை பயன்படுத்த 2022ம் ஆண்டே கோர்ட் அனுமதி வழங்கி விட்ட நிலையிலும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சர் என்றாலும் கூட சிறைக்குள் இருந்தாலும் அதிகாரம் மிக்கவராகத்தான் திகழ்கிறார். எனவே சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசாரின் கோரிக்கையை பரிசீலிக்கக் கூடாது. அதனால் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் அறிவித்தபடி சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

செந்தில்பாலாஜிக்கு அடுத்த சிக்கல்

மனுதாரர்களின் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட், சிறப்பு புலனாய்வு குழுவை அமைப்பதற்கான மனுவை தாக்கல் செய்யுமாறு கூறி விசாரணையை ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்திருப்பதை பார்த்தால் விரைவில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து இரண்டு மாத காலத்திற்குள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான லஞ்ச வழக்கை விசாரித்து முடித்துவிடும் என்பது உறுதியாக தெரிகிறது. அல்லது அதிக பட்சம் மூன்று மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.

“இது திமுக அரசின் சென்னை மாநகர காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் கொடுத்த பலத்த அடியாக கருதப்படுகிறது” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அண்ணன் தம்பிக்கு பலத்த அடி

“ஏனென்றால் சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் சிறப்பு புலனாய்வு குழு மிகத் துல்லியமாக ஊடுருவி அதிரடி விசாரணை நடத்தும். இந்த குழு சிக்கலான குற்றச் சம்பவங்களை விசாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற நபர்களைக் கொண்ட இந்திய சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் பயிற்சி பெற்ற பிரிவாகும்.

விசாரணையை தொடங்கும்போது உண்மையிலேயே பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் எத்தனை பேர் என்ற கணக்கைத்தான் அவர்கள் முதலில் எடுப்பார்கள். அதேபோல செந்தில் பாலாஜியிடமும், அவருடைய தம்பி அசோக் குமாரிடமும் தீவிர விசாரணை நடத்துவார்கள். அந்தக் குழு நேரில் ஆஜராகச் சொன்னால் அண்ணன், தம்பி இருவரும் ஆஜராகத்தான்வேண்டும். சாக்குப்போக்கு எதுவும் கூற முடியாது. மீறினால் கைது செய்யப்படும் வாய்ப்புகளும் அதிகம்.

செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருடைய தம்பி அசோக்குமார் இதய நோய் பிரச்சினைக்காக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருவதாகவும் இன்னொருபுறம் அமலாக்கத்துறையை சந்திக்கப் பயந்து பயணிகள் சொகுசு கப்பல் ஒன்றில் உலக நாடுகளில் 7 மாத கால சுற்றுலா மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

3 பேருக்கு 7 ஆண்டு சிறை?

அதேநேரம் லஞ்சப் பணம் ஒரு கோடியே 64 லட்சம் ரூபாயில் ஒரு கோடியே 34 லட்சம் ரூபாயை செந்தில் பாலாஜி தனது வங்கி கணக்கிலும், 29 லட்சம் ரூபாயை தனது மனைவியின் வங்கிக் கணக்கிலும் டெபாசிட் செய்ததற்கான ஆதாரங்களின் அடிப்படையில்தான் அமலக்கத்துறை அவரிடம் விசாரணையே நடத்தியது. அதை வைத்தும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டு. லஞ்சம் கொடுத்த 40 பேரில் 20 பேர் அமலாக்கத்துறையிடம் நேரில் ஆஜராகி அதை உறுதி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதைவிட மிக முக்கியமானது சுப்ரீம் கோர்ட் நியமிக்கும் சிறப்பு புலனாய்வு குழு என்பதால் அதை தடை செய்யவேண்டும் என்று கூறி யாரும் கோர்ட்டுக்கு செல்ல முடியாது. மேலும் லஞ்சம் கை மாறியது, உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் செந்தில் பாலாஜி அவருடைய மனைவி மற்றும் அசோக்குமார் மூவருக்கும் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம்.

இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் மீது நடவடிக்கை நிச்சயம் உண்டு என்பதால் அது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பெரிய அளவில் பாதகமாகவே அமையும். சிறுத்தையின் பிடியிலிருந்து தப்பித்து, சிங்கத்திடம் சிக்கிக் கொண்டது போல என்று சொல்வார்கள். அதுபோன்ற நிலைதான் தற்போது செந்தில் பாலாஜிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஏற்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அதனால் வரும் எட்டாம் தேதி சுப்ரீம் கோர்ட் என்ன முடிவெடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துவிட்டது என்னவோ உண்மை!

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 432

    0

    0