சீனியர்களுக்கு சிக்கல்… உதறித் தள்ளும் உதயநிதி : திமுகவில் பூகம்பம்!!
Author: Udayachandran RadhaKrishnan21 February 2024, 9:10 pm
சீனியர்களுக்கு சிக்கல்… உதறித் தள்ளும் உதயநிதி : திமுகவில் பூகம்பம்!!
2021-ல் திமுகவுக்கு தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்து, தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு பெரிதும் உதவிய பீகார் மாநிலத்தின் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கும், திமுக தலைமைக்கும் இடையேயான நெருக்கம் இன்னும் குறையாமல் அப்படியேதான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவது
போல அவ்வப்போது சில நிகழ்வுகள் நடப்பதை காண முடிகிறது.
ஏனென்றால் அப்போது தேர்தல் நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவன ஊழியர்கள் தலா 3 பேரை ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் அனுப்பி வைத்து அங்கு செல்வாக்குமிக்க திமுக நிர்வாகி யார்?…அவர் தேர்தலில் நிறுத்தப்பட்டால் வெற்றி பெறுவாரா என்பதை சர்வேயாக எடுத்து அறிவாலயத்திற்கு சமர்ப்பிக்கவும் செய்தனர்.
அதன் அடிப்படையிலும், திமுக தலைவர் ஸ்டாலின் செய்த சிபாரிசின் மூலமும்தான் 2021 தேர்தலுக்கு திமுக வேட்பாளர்களே தேர்வு செய்யப்பட்டனர்.
இதே பாணியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதியும் அவருடைய மைத்துனர் சபரீசனும் கையில் எடுத்துக் கொண்டிருப்பது தெரிகிறது.
அதுவும் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின் பேரில் மாதம் ஒரு சர்வேயை தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கடந்த நான்கு மாதங்களாக திமுக இளைஞரணி நிர்வாகிகள் எடுத்து வருகின்றனர். இதற்காக ஐபேக் நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றிய 700க்கும் மேற்பட்டவர்களில் 25 பேரை திமுக இன்றும் தங்களது தேர்தல் பணிக்காக தக்க வைத்துக் கொண்டுள்ளது என்கிறார்கள்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் 20 எம்பி சீட்களில் திமுக போட்டியிட்டது இம்முறை 25 தொகுதிகளில் களம் காணும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது யாருக்கெல்லாம் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும், யாருக்கெல்லாம் வாய்ப்பில்லை என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக திமுகவின் இளைஞர் அணியினர் கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பல்வேறு கேள்விகளை முன் வைத்து ரகசிய சர்வே எடுத்தும் இருக்கின்றனர்.
கடைசியாக பிப்ரவரி மாத முதல் வாரம் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த ரகசிய சர்வேயில் வடசென்னை கலாநிதி வீராசாமி, சேலம் பார்த்தீபன், நெல்லை ஞானதிரவியம், வேலூர் கதிர் ஆனந்த், கள்ளக்குறிச்சி கவுதம சிகாமணி, திருவண்ணாமலை அண்ணாதுரை ஆகியோர் மீது மக்கள் மத்தியில் பலத்த அதிருப்தி நிலவி வருவது கண்டறியப்பட்டு இருப்பதும் இவர்கள் மீண்டும் அதே தொகுதிகளில் நிறுத்தப்பட்டால் வெற்றி வாய்ப்பை உறுதியாக கூற முடியாது என்று சந்தேகம் தெரிவித்து உள்ளதாக தெரிகிறது. இதனால் இவர்களை திமுக தலைமை மறுபடியும் களம் இறக்க தயக்கம் காட்டுகிறது.
இதேபோல தர்மபுரி தொகுதி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் மீதும் தொகுதியில் அவப் பெயர் நிலவுவது தெரிய வந்துள்ளது.
அவர் வட மாநிலங்கள் குறித்து கிண்டலாக பேசியதும், அரசு நிகழ்ச்சிகளில் சாமி படம் வைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்ததும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் ‘இம்முறை அவருக்கு வாய்ப்பளிக்கக் கூடாது’ என்று திமுக நிர்வாகிகளே அவருக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியும் வருகின்றனர்.
அதேநேரம் திமுகவின் கொள்கைகளை களத்தில் தீவிரமாகப் பேசி வரும் செந்தில்குமாருக்கு மீண்டும் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என தர்மபுரி தொகுதி திமுக முக்கிய நிர்வாகிகளில் இன்னொரு தரப்பினர் தலைமையை தொடர்ந்து வலியுறுத்தியும் வருகின்றனர். இப்படி அவர் மீது இரு வேறு கருத்துகள் இருப்பதால் அவருடைய பெயர் சந்தேகப் பட்டியலில்தான் வைக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுகவின் பொருளாளரான டி ஆர் பாலுவை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களம் இறக்க திமுக விரும்பவில்லை என்கிறார்கள். ஏனென்றால் அவருக்கு தற்போது 83 வயதாகிறது. அவரைத் தேர்தலில் நிறுத்தினால் சுறுசுறுப்புடன் தொகுதியை சுற்றி வந்து பிரச்சாரம் செய்வது கடினம் என்பதால் அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்து டெல்லிக்கு அனுப்பி விடலாம் என்று திமுக தலைமை கருதுகிறது.
மேலும் டி.ஆர் பாலுவை பொறுத்தவரை அமைச்சர் உதயநிதியை மேடையில் வைத்துக் கொண்டே அவருக்கு அறிவுரை கூறுவதுபோல மறைமுகமாக சாடியவர். சமீபகாலமாக நான் எப்போது அரசியலுக்குள் நுழைந்தேனோ அப்போதே சூடு, சொரணை எல்லாவற்றையும் மறந்துவிட்டேன் என்று பொதுக் கூட்டங்களில் பேசியும் வருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் அவர் இதுபோல் ஏடாகூடமாக எதுவும் பேசி விடக்கூடாது என்பதற்காகவும் ராஜ்ய சபா எம்பி பதவியை டி. ஆர். பாலுவுக்கு கொடுக்க உதயநிதி நினைத்து இருக்கலாம்.
இதேபோல் தஞ்சாவூர் தொகுதியில் 1996 முதல் தொடர்ச்சியாக ஆறு முறை வெற்றி பெற்றுள்ள இன்னொரு சீனியரான எஸ் எஸ் பழனி மாணிக்கத்துக்கும் எம்பி சீட் தரக்கூடாது என்ற முணுமுணுப்பு திமுகவினரின் அனைத்து தரப்பினரிடமும் காணப்படுகிறது.
அவர் இளைஞர்களுக்கு வழிவிட்டு தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக்கொள்ளவேண்டும் என்று திமுகவில் பலரும் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டனர். ஒருவேளை இதையும் மீறி ஏழாவது முறையாக பழனிமாணிக்கம் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அது கட்சிக்கு பாதகமாகவே முடியும் என்று சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே ஆரூடமும் கூறுகின்றனர்.
பொள்ளாச்சி திமுக எம்பி சண்முகசுந்தரத்தின் நிலைமையும் இதேபோல்தான் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் அவருடைய செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை என்கிற எண்ணம் தொகுதி மக்களிடம் பரவலாக காணப்படுகிறது. இதனால் அவருக்கும் மறு வாயப்பு வழங்கப்படுமா? என்பதும் சந்தேகம்தான்.
“இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 2019 தேர்தலை விட திமுக கூட்டணியின் ஓட்டு வங்கி 10 முதல் 12 சதவீதம் வரை குறையலாம் என்று இதுவரை வெளியாகி இருக்கும் பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும் தெரியவந்துள்ளது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி 53 சதவீத ஓட்டுகளை குவித்தது. இம்முறை அது 40 சதவீதமாக குறைவதற்கு வாய்ப்பு உள்ளது” என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
“எஞ்சிய 60 சதவீத ஓட்டுகளில் 41 சதவீதம் அதிமுக பக்கமோ, பாஜக கூட்டணி பக்கமோ அப்படியே சாய்ந்தால் திமுக கூட்டணி 12 முதல் 15 இடங்களில் நிச்சயம் தோல்வி காண்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.
இதற்கு முக்கிய காரணம் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க இளைய தலைமுறையினர் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுவதுதான். இதனால்தான் திமுக அரசு சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு அரசு கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது என்று சில கட்சிகள் வைக்கும் வாதமும் ஏற்கும்படியாக உள்ளது.
மேலும் திமுகவின் இந்த வாக்கு சரிவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, சொத்து வரி, மின் கட்டணம் கடும் உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் 42 சதவீதம் வரை உயர்வு, சிறுமிகள்-பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, திமுக நிர்வாகிகளின் அத்துமீறல்கள், சொத்து அபகரிப்பு போன்றவையும் இருக்கலாம்.
எனவேதான் திமுகவிற்கு புது ரத்தம் பாய்ச்சுவது போல் எம்பி வேட்பாளர்களில் அதிகளவில் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று அமைச்சர் உதயநிதி தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
சேலம் இளைஞர் அணி மாநாட்டு மேடையிலேயே ‘இளைஞர்களுக்கு வாய்ப்பு தாருங்கள்’ என அவர் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வெளிப்படையாக கோரிக்கையும் வைத்தார். எனவே இம்முறை வேட்பாளர் தேர்வில் உதயநிதியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்றே சொல்லவேண்டும். தவிர திமுக ஐடி விங் மற்றும் இளைஞர் அணியில் இருந்து சிலரது பெயர்களையும் அவர் திமுக வேட்பாளர்களாக பரிந்துரைத்து இருக்கிறார் என்கிறார்கள்.
இப்படி உதயநிதி வேட்பாளர் தேர்வில் தலையிடுவது திமுகவின் சீனியர் தலைவர்களுக்கு பெருத்த குடைச்சலைக் கொடுத்துள்ளது. குறிப்பாக டெல்லியில் திமுகவின் முகமாகச் செயல்பட்டு வரும் சீனியர் எம்பிக்கள் சிலர் தங்களுக்கு உதயநிதி முட்டுக்கட்டை போடுவதை கொஞ்சமும் விரும்பவில்லை. இந்த நிலையில்தான் பிப்ரவரி மாத முதல் வாரம் திமுக இளைஞரணி எடுத்த நான்காவது ரகசிய சர்வேயிலும் தேர்தல் கள நிலவரம் திமுகவுக்கு ஓரளவுக்கு மட்டுமே சாதகமாக இருப்பது தெரியவந்துள்ளது என்று கூறப்படுகிறது.
ஒருவேளை தொகுதி மக்களிடம் உங்கள் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. அதனால் நீங்களே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் கௌரவமாக ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று உதயநிதி வெளிப்படையாக சொல்லாமல் மறைமுகமாக அட்வைஸ் பண்ணுகிறாரோ?… என்று கருதவும் தோன்றுகிறது.
அதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சரிவர செயல்படாத 7 திமுக எம்பிக்களுக்கும், மூன்று சீனியர் எம்பிக்களுக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்பது உறுதி” என்று அந்த அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சீனியர்களை ஓரங்கட்ட நினைப்பதாக கூறப்படும் அமைச்சர் உதயநிதியின் முயற்சி பலிக்குமா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்!