பட்டமே வேண்டாம்… பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பேராசிரியர்கள் : வெளியேறிய ஆளுநர்… வாழ்த்திய எம்பி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2023, 5:02 pm

பட்டமே வேண்டாம்… பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பேராசியர்கள் : வெளியேறிய ஆளுநர்… வாழ்த்திய எம்பி!!

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க தமிழக அரசு முடிவெடுத்திருந்தது.

இது தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கோப்பில் அவர் அவர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதற்கு அமைச்சர் பொன்முடி, சிபிஎம் தலைவர்கள் என பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 55வது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகங்களின் வேந்தரும், ஆளுநருமாகிய ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

இந்த விழாவில் பங்கேற்க வரும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என சிபிஎம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதேபோல போராட்டமும் நடைபெற்றது. இப்போராட்டத்தை கண்டுக்கொள்ளாமல் ஆளுநர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.

இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். அதேபோல 2 பேராசியர்கள் இந்த விழாவை புறக்கணித்தனர். ஆளுநர் கையால் பட்டம் பெற விரும்பாததால்தான் அவர்கள் விழாவை புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விழாவை புறக்கணித்த பேராசிரியர்களுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “விடுதலை போராட்டம், ஜனநாயக மாண்பு, பல்கலைக்கழகத்தின் உரிமை என எதையும் மதிக்காமல் ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநரின் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து புறக்கணித்த பேரா. சுரேஷ், பேரா. சி. ரமேஷ்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள். பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த 15 க்கும் மேற்பட்ட சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் ஆளுநர் பட்டம் அளித்த பின்னர் உரையாற்றுவது வழக்கம். கடந்த ஆண்டும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அவர் உரையாற்றியிருந்தார். ஆனால் தற்போது இந்த விழாவை அமைச்சர் புறக்கணித்ததால் ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி