தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐஜிக்கு பதவி உயர்வா.. திமுக அரசுக்கு கூட்டணி கட்சி கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2023, 9:46 pm

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐஜிக்கு பதவி உயர்வா.. திமுக அரசுக்கு கூட்டணி கட்சி கண்டனம்!!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும், அன்றைய தென்மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ் அவர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

இதனை மறு பரிசீலனை செய்வதோடு, சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விரைந்து தண்டிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இது தொடர்பாக சிபிஎம் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை 2022 அக்டோபர் மாதம் வெளியானது.

இந்த அறிக்கை பல்வேறு குற்றங்களை வெளிக்கொண்டுவந்தது. அன்றைய மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேஷ், தென் மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த கபில் குமார் சரத்கர், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

ஆனால், அருணா ஜெகதீசன் அறிக்கை வெளியாகி ஓராண்டான நிலையில், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் கே.எஸ். அர்ஜுனன் தொடர்ந்த வழக்கில் மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரையும் விசாரித்து ஆறு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியது.

ஆனால், இந்நிலையில் அன்றைய தென் மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் இப்போது டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளது பணி மூப்பு அடிப்படையில் என்றாலும் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எனவே, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், தற்போது சைலேஷ் குமார் யாதவ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டிஜிபி பதவி உயர்வினை மறுபரிசீலனை செய்து ரத்து செய்திட வேண்டுமெனவும் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வழக்கில் குற்றவாளிகள் அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தயங்குவது உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு தூண்டுகோளாக அமைந்து விடும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 426

    1

    0