வீராங்கனை மரண விவகாரத்தில் மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம் வெடிக்கும் : தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2022, 6:58 pm

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் பிரியா. 17 வயது நிரம்பிய இவர் தனியார் கல்லூரியில் படித்து கொண்டிருந்தார். கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். மாவட்ட மற்றும் மாநில அளவிலான கால்பந்து போட்டிகளில் பங்கேற்று வந்த நிலையில் மூட்டு வலியால் அவதிப்பட்டார். வலது கால் மூட்டு பகுதியில் ஜவ்வு விலகியது தெரியவந்தது.

இதையடுத்து சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு போடப்பட்ட கட்டால் ரத்த ஓட்டம் தடைப்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரியா இறந்தார். இந்த விஷயத்தில் டாக்டர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் இருவரும் பணிஇடமாற்றம் செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மேலும் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செயத்னர். அதோடு மாணவி பிரியா உயிரிழந்தது தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க தமிழக அரசு ஒரு மருத்துவக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்த குழு விசாரித்து அறிக்கை வழங்கி உள்ளது. அதில் டாக்டர்களின் கவனக்குறைவே காரணம் என கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து டாக்டர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் ஆகியோர் மீதான வழக்கு கடுமையாக்கப்பட்டது. சந்தேக மாரணம் என்ற பிரிவிலிருந்து கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் எனும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 304-ஏ என்ற பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரினர். நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் டாக்டர்கள் தலைமறைவாக உள்ளனர்.

இந்நிலையில் தான் 2 டாக்டர்களை கைது செய்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர் செந்தில் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மரணம் தொடர்பாக சங்கம் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறது. முதலமைச்சரும், தமிழக அரசும் இறந்த குடும்பத்தாருக்கு வழங்கிய ஆறுதலையும் உதவி தொகைக்கும் சங்கம் நன்றி தெரிவித்து கொள்கிறோம். அதே சமயம் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலில் மருத்துவ சிகிச்சையின் போது ஏற்பட்ட இறப்பில் பொதுவாக அந்த துறை மூத்த ஸ்பெஷலிஸ்ட் கருத்தை காவல் துறை பெற வேண்டும். அவ்வாறு மூத்த ஸ்பெஷலிஸ்ட் அந்த மரணத்தில் மருத்துவ சிகிச்சையின் போது கடும் கவனக்குறைவு (Criminal Negligence) இருக்கிறது என்று கூறினால் மட்டுமே காவல்துறை 304 A பிரிவில் வழக்கு தொடர வேண்டும். அப்படி 304 A பிரிவில் வழக்கு தொடர்ந்தாலும் டாக்டர்களை கைது செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.

தற்போது நடந்த மரணத்தில் கிரிமினல் கவனக்குறைவு இருப்பதாக சிறப்பு மருத்துவர் குழு அறிக்கை கொடுக்கவில்லை. சிவில் கவனக்குறைவு இருப்பதாகவே கூறியுள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும் மீறி தமிழக காவல்துறை கிரிமினல் வழக்கில் மருத்துவர்களை சேர்த்து அவர்களை தனிப்படை அமைத்து தேடி வருவதாக செய்திகள் வருகிறது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றாமல் மருத்துவர்களை கொலை குற்றவாளி போல முன்ஜாமீன் மறுத்து உடனடியாக சரணடைய கூறி இருப்பது நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களையும் ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.

மேலும் இது மருத்துவர், செவிலியர் மற்றும் சுகாதார அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு எதிரானது என்று சங்கம் கருதுகிறது. எனவே மருத்துவர் மீது பதியப்பட்ட 304ஏ பிரிவு மாற்றப்பட வேண்டும்.
அதையும் மீறி மருத்துவர் கைது செய்யப்பட்டால் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் உடனடியாக மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கேட்டு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் அனுப்பியுள்ளது. தேவைப்பட்டால் மற்ற சுகாதார ஊழியர் சங்கங்களையும் சேர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

மருத்துவர்களும் மனிதர்களே. நல்ல எண்ணத்தில் செயல்பட்டவர்கள் தான். கவனக்குறைவினால் துரதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்பட்டது. சட்டப்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது

  • Dhanush accused of troubling Keerthy Suresh கீர்த்தி சுரேஷ்க்கு தொல்லை : தனுஷை எச்சரித்த ரஜினி..வெளிவந்த ரகசியம்..!
  • Views: - 432

    0

    0