தேர்தல் நிதியை பெறுவதற்காக கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி..? திமுக அரசு மீது கிருஷ்ணசாமி பகிரங்க குற்றச்சாட்டு..!!
Author: Babu Lakshmanan7 November 2023, 4:45 pm
திமுக நாடாளுமன்ற தேர்தல் நிதியை பெறுவதற்காக தான் கிரானைட் குவாரிகளை திறக்க நினைக்கிறது என மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது :- தமிழகத்தில் 3 மாதங்களாக சாதிய வன்முறை சம்பவங்கள் மெல்ல மெல்ல தொடங்கியுள்ளன. தமிழகத்தில் தலித் மக்கள் மீது மனித உரிமை மீறல்கள் மற்றும் கொலைகள் நடைபெறுகிறது. சாதிய வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மனித உரிமை மீறல் மற்றும் வன்கொடுமை தடுப்பு பேரணி நவம்பர் 18ல் திருநெல்வேலியில் நடைபெறவுள்ளது. கிரானைட் முறைகேடு வழக்குகளில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுரை மாவட்டத்தில் புதிய கிரானைட் குவாரிகளுக்கு தமிழகம் அரசு அனுமதி வழங்க கூடாது. எந்தவொரு காலத்திலும் தமிழக அரசு மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளுக்கு அனுமதிக்க கூடாது.
கிரானைட் குவாரிகளுக்காக மலைகள், சமணர் படுக்கைகள், குளங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டன. திமுக நாடாளுமன்ற தேர்தல் நிதியை பெறுவதற்காக தான் கிரானைட் குவாரிகளை திறக்க நினைக்கிறது.
கிரானைட் முறைகேடு வழக்குகளில் தமிழக அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ஒன்றரை இலட்சம் கோடி மீட்கப்பட்டதா?, டிசம்பர் 15ல் மதுவை ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது, என கூறினார்.